சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று யுஜிசி ( பல்கலைக் கழக மானியக் குழு) மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசின் உத்தரவுக்கு எதிராக யுஜிசி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருவது தமிழக மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமரவில்விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில்மனுவில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவித்திருந்தது. இதையடுத்து வழக்கு நவம்பர் 20ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் , பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், பல்கலைக்கழகத்தின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]