சென்னை: ஆரியம் – திராவிடம் என்பது பொய் பிரசாரம். இதை பாடநூல்களில் இருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து முடிவு செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் ஆரியம், திராவிடம் குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘‘ஆரியன், திராவிடன் என உலகில் இரு மனித இனங்கள் உள்ளன எனக் கூறி அரசியல் கட்சியினர் மக்களை பாகுபாடு செய்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி எந்தவொரு இனக்குழுக்களும், இனக்கோட்பாடும் இல்லை. இரண்டுமே தவறானது.
ஆனால், தமிழக அரசு மாணவர்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் விதமாக இந்த பொய் பிரச்சாரத்தை பாடநூல்களி லும் வைத்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டும். எனவே ஆரியம், திராவிடம் என்ற பாடத்தை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். அத்துடன் மக்களிடம் பாகுபாடு காட்டியதற்காக அரசு மன்னிப்பு கோரவும், இதுபோன்ற பிரச்சாரத்தை இனிமேல் முன்னெடுக்கக்கூடாது எனவும்உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பி்ல் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ‘‘பாடநூல் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பாடத்திட்டத்தை வகுக்க அதற்கான குழுக்கள் அமைக்கப்ப்டுகிறது. மனுதாரர் இந்த கோரிக்கையை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநரிடம் மனுவாக அளித்தால் பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், ‘‘மனுதாரர் இதுதொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மனு அளித்தால் பரிசீலிக் கப்படும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஆரியம் – திராவிடம் என்பது பொய்யான பிரச்சாரம் என மனுதாரர் கூறுகிறார். அது உண்மையா அல்லது பொய்யா என்பதை முடிவு செய்யும் அளவுக்கு தனித்துவமான வரலாற்றையோ, மனித இனங்களின் தோற்றம் குறித்தோ இந்த உயர் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை.
எனவே ஆரியம் – திராவிடம் குறித்து முழுமையாக ஆராயாமல் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது.
எனவே, இந்த மனுவையே கோரிக்கை மனுவாகக் கருதி 12 வார காலத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அப்போது மனுதாரரின் கருத்தையும் கேட்க வேண்டும்’’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.