பஹல்காம் பயங்கரவாதத் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்களின் ஓவியங்களை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒருவரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ரவுத் என்ற இளைஞர் இவ்வாறு கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு முதல் நாள் ஏப்ரல் 21ம் தேதி பைசரன் பள்ளத்தாக்கில் குதிரை சவாரி சென்று திரும்பிய ஆதர்ஷ் ரவுத் ஒரு மேகி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​தன்னிடம் அந்த நபர் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

‘நீங்க ஒரு இந்துவா?’ “நீங்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர் போல் தெரியவில்லையே” என்று கேட்டதை அடுத்து தான் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த நபர் தனது கூட்டாளியிடம் இன்று கூட்டம் குறைவாக இருப்பதாகக் கூறியதாக ஆதர்ஷ் ரவுத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நேரத்தில் அது தனக்கு விசித்திரமாகத் தோன்றியது என்றும், ஆனால் மறுநாள் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது தான் தன்னால் இதனை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் ரவுத் கூறினார்.

இந்த வழக்கில் மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) வெளியிட்டபோது, ​​அவர்களில் ஒருவரின் முகம் தான் சந்தித்த நபரைப் போலவே இருப்பதாக ராவத் கூறினார்.

இது தொடர்பாக தனக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் விரிவான மின்னஞ்சல் மூலம் NIA-க்கு அனுப்பியுள்ளதாக ரவுத் மேலும் கூறினார். இதில் நபருடனான உரையாடல், இடம், தேதி மற்றும் கடை உரிமையாளருக்கு பணம் செலுத்த இயலாமை கூட அடங்கும். நெட்வொர்க் பிரச்சனை காரணமாக அவரால் அந்த நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை.

ஆனால் பின்னர் அவர் கடை உரிமையாளரின் தொலைபேசி எண்ணை எடுத்து பணத்தை அனுப்பினார். விசாரணை அமைப்புகள் தன்னைத் தொடர்பு கொண்டால், சாத்தியமான எல்லா வழிகளிலும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ராவத் கூறினார். இருப்பினும், இந்த விஷயத்தில் NIA-விடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில் பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்து மகாராஷ்டிரா இளைஞர் வெளியிட்டிருக்கும் தகவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.