சாமிக்கு அடிக்கடி சூடம் காட்டுவதால் கை வலிக்கிறதென்று ’ஆட்டோமேட்டிக்காக’ சூடமேற்றுவது போல ஒரு மிஷன் கண்டுபிடித்து, அதை ஒரு பூசாரி பயன்படுத்துவது போன்ற போட்டோ ஒன்று இணையதளத்தில் உலவியதைப் பார்த்தேன். அது உண்மையா… இல்லை ஃபோட்டோஷாப் வேலையா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் வியர்வைக் காணாத, சொகுசான வேலையைச் செய்யும் மனிதர்களுக்கு, அந்த வேலையை இன்னும் எளிமையாக்க அல்லது சொகுசாக்க இந்த அரசாங்கத்தின் தொழில் நுட்பம்தான் எவ்வளவு மெனக்கெடுகிறது!
வாரத்திற்கொரு முறை புளூட்டோ கிரகம் வரையிலும் செயற்கைக் கோள் செலுத்தும் தொழில் நுட்பத்தில் மிகச் சிறந்து விளங்கும் இந்த நாட்டில்தான் பீக்குழியில் இறங்கி அதைச் சுத்தப்படுத்த… மனிதனே தேவைப்படுகிறான்.
இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழும் அல்லது இருக்கும் மனிதர்களுக்கான பிரச்சினைகள் குறித்து துளியளவும் சிந்திப்பதில்லை இந்த அரசு எந்திரம் அல்லது எந்திர அரசாங்கம். அப்படிப்பட்ட ஈவிரக்கமற்ற அரசாங்கத்தின் மீது, ஈவிரக்கமில்லாமல் குத்தீட்டிக் கேள்விகளைப் பாய்ச்சுகிறது ’அறம்’.
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகிலிருக்கும் ஒரு கிராமம். கடலோரப் பகுதியில் இருந்தாலும் குடி நீர்ப் பஞ்சத்தில் திளைக்கிறது காட்டூர் என்கிற அந்த கிராமம். இன்றைய எல்லா இந்திய கிராமங்களைப் போலவும் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் கரிப்பாகி விட்ட கிராமமான அதில், குடி நீருக்காக குடங்களைச் சைக்கிளிலும் பைக்குகளிலும் கட்டிக் கொண்டு அலையும் மக்கள். ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் விடும் போது மட்டும் அதனை ஒரு திருவிழா போல கொண்டாடுவது அவர்களின் வழக்கம். பெயிண்ட் அடிப்பது, கடல் சிப்பிகளைச் சேகரிப்பது என்று பல்வேறு உதிரித் தொழில்களைச் செய்து பிழைப்பவர்களாக இருந்தாலும் இந்தியா வல்லாரசாவதில் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. அதில் புலேந்திரனின் குடும்பமும் ஒன்று.. அவனுடைய மனைவி சுமதியும் உதிரி வேலைகளைச் செய்து வருபவள். அவள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மூடப்படாத ஒரு ஆழ்துளைக் கிணற்றுக்குள் அவளின் நான்கு வயது குழந்தை விழுந்து விட, அந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபடுகிறார் ஒரு மாவட்ட ஆட்சியர். அந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் அவர் என்னென்ன தடைகளைச் சந்திக்கிறார் அந்த தடைகளை உடைத்து குழந்தையை மீட்டாரா இல்லையா என்கிற தவிப்பை உருவாக்குகிறது ’அறம்’
சராசரியான ஒரு வாழ்வை வாழ்வதற்காக, கடைநிலை மனிதர்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகள் குறித்து அக்கறையுடன் சமீபத்தில் எந்தவொரு படமும் பேசவில்லை. அந்தளவிற்கு எளிய மக்களின் வலிகள் குறித்து நெருக்கத்தில் சென்று பேசுகிறது ’அறம்’. அதற்காகவே இயக்குனர் கோபி நயினார் கொண்டாடப்பட வேண்டியவர். உழைக்கும் மக்களின் மீதான அவருடைய கரிசனமும் அன்பும், அவர்களைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கறைக் கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான கோபமும் படம் நெடுக அவ்வளவு விரவிக் கிடக்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
கோபி நயினாரைப் போன்ற பாசாங்கற்ற படைப்பாளியை அடையாளம் கண்டு கொண்டதற்காகவே மிகப்பெரிய பாராட்டைப் பெறுகிறார் நயன்தாரா. ஒரு மாவட்ட ஆட்சியர், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை, அதன் எல்லை வரை சென்று மக்களுக்காகப் பயன்படுத்த துடிக்கும் மக்களுக்கான ஒரு அதிகாரியாக அவர் சிறப்பாகப் பொருந்துகிறார். “ டிமாக்கரசிய மக்களுக்கு கத்துக் கொடுக்காதது அரசாங்கத்தோட தப்பில்லையா” என்று கேட்டு விட்டு அவர் பார்க்கும் அந்த கூரிய பார்வை அவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. அதே போல குழந்தை தன்ஷிகாவின் அண்ணனிடம் “ தம்பி.. நீ மட்டும் குழியிலிறங்கி குழந்தைய தூக்கி வந்துட்டா நிலாவுல கால் வெச்ச ஆம்ஸ்ட்ராங்க விடவும் பெரிய ஆளா மதிக்கப்படுவே” என்கிற போதும் அவரது கண்களில் அவ்வளவு தீர்க்கம் தெரிக்கிறது.
’மகளிர் மட்டும்’, ’அறம்’ என்று தமிழ் சினிமாவில் பெண் பாத்திரங்களை மையப்படுத்திய கதைகள் வருவதும், அவை ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படுவதும் ஆரோக்கியமான போக்கு. உண்மையில் கோபி நயினார் போன்ற இயக்குனர்கள் இப்படியான கதையைத் எழுதுவது சமூகத்தின் மீதான அவர்களுடைய அக்கறையைக் காட்டுகிறதென்றால், அந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நயன்தாரா போன்ற நடிகைகளின் சினிமாவின் மீதான அவர்களுடைய அக்கறை தெரிகிறது.
’அறம்’ போன்று பெண்களை மையப்படுத்திய சினிமாக்களின் வெற்றி, தமிழ் சினிமாவின் வழக்கமான பாதைகளை திசை திருப்ப உதவக் கூடும்.
அறம் படத்தின் மிகப் பெரிய பலம் அதனுடைய வசனங்கள். தண்ணீர், பறவைகள், மண், இயற்கை, அரசியல் குறித்த இயக்குனர் கோபியின் விசாலமான அறிவை படத்தின் வசனங்கள் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகின்றன. சில படங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக சில வசனங்கள் மட்டுமே அமைந்திருக்கும். ’அறம்’ படத்திலோ படம் நெடிகிலுமே குறிப்பிடத்தகுந்தாற் போன்ற வசனங்கள் அமைந்திருக்கின்றன என்பதே உண்மை. இதற்காகவே இன்னொரு முறையும் பார்க்கத் தூண்டுவதான வசனங்கள். இப்படியான வசனங்களை எழுதுவதற்கான அவருடைய அனுபவமும் அறிவும் உழைப்பும் வியக்க வைக்கின்றன. பாராட்டுக்கள்.
ஓம் பிரகாஷின் படப்பதிவு படத்தின் கதையோட்டத்திற்கு அழகாக ஒத்துழைத்திருக்கிறது. குறிப்பாக சுமதியின் மகன் தண்ணீரில் ’சொர்க் அடிக்கும் காட்சி மராத்திய படமான ’சாய்ரத்’ படத்தின் நீச்சல் காட்சி போல அழகாக இருக்கிறது. ஆழ்துளையில் மாட்டிக் கொண்ட குழந்தையை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார். சிஜியின் உதவியுடனாக இருப்பினும்.
படத்தின் முக்கியமான மற்றொரு அம்சம் அதன் படத்தொகுப்பு. முடிந்த வரையிலும் படத்தின் விறுவிறுப்பையும் பதட்டத்தையும் அதிகரிக்க மெனக்கெட்டிருக்கிறது. பல இடங்களில் ’ரிபீட்’ காட்சிகளை வைத்து சமாளித்திருப்பது தெரிந்தாலும் படத்தின் ஓட்டத்தோடு சேர்ந்து கொள்கிறது. ஆனால், அந்த தொலைக்காட்சி விவாதங்கள் கொஞ்சம் சாரமற்றிருக்கின்றன என்பதால் அவற்றை குறைத்திருக்கலாம். படத்தின் பரபரப்பிற்கு எந்த வகையிலாவது துணை செய்திருந்தால் அவ்வளவு நீளத்தை அனுமதித்திருக்கலாம். (தவிரவும் அதில் அவ்வளவு நேரம் பேசுபவர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.)
அதே போல பாராட்டப்பட வேண்டிய இன்னொருவர் பீட்டர் ஹெய்ன். ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தையை மீட்கும் போராட்டத்தை நுட்பமாகக் கையாள்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
ஜிப்ரான், பின்னணி இசையில் இன்னும் அக்கறைக் காட்டியிருக்கலாம். சிறுவர்கள் நீச்சலடித்தபடி அறிமுகமாகும் காட்சியில் பயன்படுத்தியிருக்கும் கொண்டாட்டமான பின்னணி இசை, ஒரு கட்டத்தில் அசட்டையாக மாறுகிறது. . குறிப்பாக ஜேசிபியும் இன்னபிற எந்திரங்களும் மண்ணை வாரியள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் போது படத்தில் இடம் பெரும் ஒரு பாடலையே (தோரணம் ஆயிரம்”) இசைக்கிறார். இது ஒரு மெத்தனமான போக்கு. அதைத் தவிர்த்து படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த தீம் ம்யூசிக் போல சில முயற்சிகள் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருக்கும் பட்சத்தில் பின்னணி இசை மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்திருக்கும்.
லால் குடி இளையராஜாவின் கலை இயக்கத்தில் ஆழ்துளைக் கிணறும் அதன் அருகாமைப் பகுதிகளும் நம்பும்படியான மன நிலையை ஏற்படுத்துகிறது.
அடுத்து முக்கியமாக திரைக்கதை. அதன் பிரச்சினைகள் குறித்து கவனிக்கலாம்.
விசாரணைக்குட்படும் ஒரு மாவட்ட ஆட்சியரின் பார்வையில் சொல்லப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தனது மேலதிகாரிக்கு அவர் சொல்லும் பதில்களின் வாயிலாக படத்தின் காட்சிகள் விரிவடைகிறது என்பது சுவாரசியமான ஒன்று. ஆனால், அதற்கேற்றாற் போல லாஜிக்கான காட்சிகளை எழுதியிருக்கலாம். உதாரணமாக சுமதியின் குடும்பம் மற்றும் அந்தரங்க வாழ்க்கை குறித்தெல்லாம் ஒரு கலெக்டரின் பார்வையில் சொல்லப்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
’அறம்’ படத்தின் கதையைப் பொறுத்தளவில் ”அரசாங்கத்தைப் புறம் தள்ளி தங்களுக்கான பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் மனிதர்கள்” என்னும் போது அந்த பாத்திரங்களையும் செதுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
முதலில், குழந்தை தன்ஷிகாவின் அண்ணன். அவனுடைய நீச்சல் பயிற்சியும் மூச்சை அடக்கும் திறமையும் குறித்து இன்னும் விரிவாகப் பேசி பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்திருக்கலாம். அதே போல அவனுக்கும் தங்கை தன்ஷிகாவுக்குமான பாசத்தை ஒரு எமோஷனல் போர்ஷனாக உருவாக்கியிருக்கலாம். மொத்த எந்திரங்களும் செயலிழந்து அல்லது உதவாமல் போகும் தருவாயில், அந்த பையனை குழிக்குள் இறக்கும் கலெக்டரின் முடிவு துணிச்சலானதுதான் என்றாலும், அவன் துணிந்து குழிக்குள் இறங்குவதற்கு, அவனுடைய தங்கச்சிப் பாப்பாவின் மேல் அவனுக்கிருக்கும் அளவற்ற பாசமே முக்கிய காரணமாக இருந்திருக்கும் பட்சத்தில் அது பார்வையாளர்களை இன்னும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கும். ( ஒரு சுவாரசியத்துக்காக இன்னொன்றும் சொல்கிறேன். அந்த பையன் முதல் முறையாக குழிக்குள் இறக்கப்படும் போது ”என்னால முடியல யெப்பா..” என்று கத்துகிறான் இல்லையா? உடனே அவனை மேலே தூக்கி விடுகிறார்கள். அப்போதே அவன் கைகளில் ’திடீரென’ குழந்தையுடன் வந்திருந்தால் செம சர்ப்ரைஸாக இருந்திருக்கும் இல்லையா.!.என்னவொன்று படம் கொஞ்சம் சீக்கிரம் முடிந்திருக்கும் )
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில் உள்ள சிக்கல்களையெல்லாம் அவ்வளவு நுட்பமாகக் காட்சிப்படுத்தும் இயக்குனர், படத்தின் மையப் பாத்திரங்களின் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் மையப்பாத்திரமாக கலெக்டர் மதிவதினி இருப்பதால் அவருக்கு போகிற போக்கில் ஒரு பின்னணிக் கதையை சொல்லியிருக்கலாம் அவருடைய துணிச்சலுக்கும் உறுதியான , கூர்மையான பார்வைக்கும் அந்த பின்னணிக் கதை பெரும் பலமாக இருந்திருக்கும். அப்போதுதான் ‘புறநானூறே புது வரலாறே ” என்று பாடலாசிரியர் உமாதேவிவின் வரிகளுக்கு இன்னும் வலு சேர்ந்திருக்கும்.
மட்டுமின்றி, அவர் ஒரு முன்னமே களப்பணியாளராகவோ சமூக செயல்பட்டாளராகவோ அல்லது ஆர்வலராகவோ அல்லது அப்படியாக வளர்ந்த விதமாக இருந்திருப்பதைச் சொல்லும்பட்சத்தில், க்ளைமேக்ஸில் அவர் பதவி விலகும் போது “ நான் மக்களுக்காகக் களம் இறங்கப் போகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போவது இன்னும் பொறுத்தமாக இருந்திருக்குமில்லையா? (ஆண் நடிகர்கள் மட்டும்தான் க்ளைமேக்சில் அரசியலுக்குள் நுழைய வேண்டுமா என்ன)
அப்புறம், குழந்தையின் பெற்றோர் பாத்திரங்கள் தொடக்கத்தில் அபாரமாக ஆரம்பிக்கின்றன.. தண்ணீர் பிடிக்க போவதில் தொடங்கி குழந்தைக்கு கேக் ஆர்டர் சொல்லுமிடத்தில், பெயிண்ட் அடிக்கும் இடத்தில் எல்லாம் ரத்தமும் சதையுமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், குழந்தை குழிக்குள் விழுந்த பிற்பாடு அம்மா அடிக்கடி மயக்கமடைவதிலும் அப்பா அடிக்கடி கத்துவதிலும் தொய்கின்றன அந்த பாத்திரங்கள்.
படத்தின் தொடக்கத்தில் சொல்லப்படும் ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக்கோள் செய்தி பிற்பாடு மறக்கப்பட்டுவிடுகிறது. குழந்தை மீட்பையும் சேட்டிலைட் செலுத்துதலையும் ஒரு முரணாக வைத்து பேச நினைத்திருக்கும் இயக்குனரின் எண்ணம் திரையில் இன்னும் தீவிரமாக நிகழ்ந்திருக்க வேண்டும். ப்ச்.
இப்படியாக திரைக்கதையில் சில குறைபாடுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல படத்தை, அடித்தட்டு மக்களின் மீது உண்மையான நேசம் கொண்ட ஒரு படைப்பைப் பார்த்த பரவசத்தை உருவாக்குகிறது ’அறம்”
வணிகத்திற்காகவும் பிழைப்பிற்காகவும் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் இப்படிப்பட்ட ஒரு அக்கறையான கதையை உருவாக்கியதற்காக இயக்குனர் கோபி நயினாருக்கு மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள். ( சிறந்த தமிழ்ப் படத்திற்கான / கதைக்கான தேசிய விருது கிடைக்கக் கூடும். கிடைக்க வேண்டும் )
’அறம் மதிப்பு மிகுந்த தமிழ்ப்படங்களில் ஒன்று.
’அறம்’ பார்த்துப் பழகு!
அதீதன் திருவாசகம்