திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும் இது தொடர்பான வழக்கை சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது.
2019 முதல் 2024 வரை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது லட்டு செய்ய விலங்கு கொழுப்பு கலந்த தரமற்ற நெய்யை அப்போதைய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வாங்கியதாக இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்ற சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு குறித்து எழுப்பிய சர்ச்சை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலராக இந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி பொறுப்பேற்ற சியாமளா ராவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கமளித்தார்.
2024 மார்ச் மாதம் 12ம் தேதி வெளியான டெண்டரில் பல்வேறு புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதில் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏ.ஆர். டெய்ரி புட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் ஒன்று.
இந்த டெண்டருக்கு மே மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 15-5-2024ல் AR Foods நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதற்காக TTD சப்ளை ஆர்டர் வழங்கியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த ஆர்டரைத் தொடர்ந்து ஏ.ஆர். டெய்ரி புட் அனுப்பிய நெய் ஜூலை 6 மற்றும் ஜூலை 12 என இரண்டு பிரிவுகளாக குஜராத்தில் உள்ள NDDB – CALF பரிசோதனை கூடத்தில் சோதனை செய்யப்பட்டதில் அது TTD டெண்டர் விதிமுறைகளின்படி தேவஸ்தானம் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டதாக சியாமளா ராவ் கூறினார்.
இதனையடுத்து திண்டுகல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவன அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திருப்பதியில் லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட தரமற்ற நெய் எங்களது நிறுவனத்தில் இருந்து வழங்கப்பட்டது அல்ல.
எங்கள் நிறுவனத்தில் இருந்து முதல் முறையாக ஜூன் மாதம் நான்கு கண்டெய்னர்களில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த நெய் திருப்பி அனுப்பப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சரியான காரணத்தை விளக்கக் கோரி தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட நிலையில் இதுவரை அவர்களிடம் இருந்து அதற்கான பதில் வரவில்லை” என்று கூறினர்.
செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அதிகாரி, “எங்கள் நிறுவனத்தை தடை செய்திருப்பதாகவோ கருப்பு பட்டியலில் சேர்ந்துள்ளதாகவோ TTDயிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை” என்று விளக்கமளித்தார்.
திருப்பதியில் லட்டு செய்வதற்கு எங்களைப் போன்று வேறு பல நிறுவனங்களும் நெய் சப்ளை செய்து வருகிறது என்று கூறிய அவர்கள், குஜராத் பரிசோதனைக் கூடம் வழங்கியதாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் எங்களது நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.
விலங்கு கொழுப்பு கலந்த தரமற்ற நெய்யில் தயாரிக்கப்பட்ட நெய் எங்கள் நிறுவனத்தின் நெய் அல்ல என்று உறுதியாக கூறிய அந்த அதிகாரிகள் தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால் பொருட்களுக்கு பேட்ச் வாரியாக தர பரிசோதனை செய்து சான்று பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
ஏ.ஆர். டெய்ரி புட் பிரைவேட் லிமிடெட் நிறுவன நெய் கொள்முதலை நிறுத்திவைத்தது குறித்து தேவஸ்தானம் சரியான விளக்கம் தரவில்லை என்றால் அதுகுறித்து நீதிமன்றத்தை நாடவும் தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், திருப்பதி லட்டு போல் அல்லாமல் எங்கள் நிறுவனத்தின் பால் பொருட்கள் ‘ராஜ் மில்க்’ என்ற பெயரில் சந்தையில் எளிதில் கிடைக்கும் நிலையில் அதனை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வாங்கி அதன் தரத்தை சோதித்து உறுதி செய்துகொள்ள முடியும் என்று விளக்கமளித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி இடையிலான திருப்பதி லட்டு பிரச்சனை… மத்திய அரசு கையிலெடுத்தது…