சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவல்கள் குழுக்களை நியமிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 20,600 கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என அறநிலையத்துறை  தெரிவித்து உள்ளது.

ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், இந்து கோவில்களில், அயல்பணி என்ற முறையில், அறநிலையத் துறை ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த கோவில்களின் நிதியில் இருந்து சம்பளம், அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால், கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகளில் ஊழியர்களை நியமிக்க, அறங்காவலர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை. நிர்வாக அதிகாரியை மட்டுமே கோவில்களுக்கு நியமித்துக் கொள்ளலாம்.

அறநிலையத் துறை சட்டம், நிர்வாக அதிகாரி தவிர்த்து, அரசு ஊழியர்களை நியமிக்க அனுமதி அளிக்கவில்லை. அறநிலையத் துறை ஊழியர்களை, கோவில்களில் உள்ள பல்வேறு பதவிகளில் சட்ட விரோதமாக நியமிக்கின்றனர். துணை ஆணையர் முதல், ஆய்வாளர்கள் வரை, அயல்பணி என்ற முறையில் கோவில்களில் நியமிக்கின்றனர்.எனவே, அயல்பணி என்ற முறையில், கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களில் அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க, அறநிலையத் துறை ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும். கோவில் நிதியில் இருந்து வழங்கப்பட்ட சம்பளம், அலவன்ஸ் தொகையை திருப்பி கொடுக்கும்படிஉத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை முதலில்  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச் ,விசாரணை நடத்தியது. அப்போது, .மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கோவில்களில் உள்ள பணியிடங்களுக்கு நியமிக்க, அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.< அயல்பணி என்ற முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும், என்றார்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, அறங்காவலர்களை நியமிக்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு வாரங்களில் குழுக்கள் அமைக்கப்படும், என்றார்.

அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதித்தால், கோவில் நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படலாம்; கோவில் நிலங்கள், சொத்துக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.கோவில்களில் தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில், ஊழியர்கள் நியமனம் தொடர்பாக முடிவெடுக்க, விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போது தான், கோவில்கள் சுமுகமாக செயல்படும் என கூறியது. இதையடுத்து,  அறங்காவலர்கள் நியமனம் குறித்தும் அறநிலையத்துறைக்கு நீதிமற்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது.

இதைத்தொடர்ந்து, அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, அதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டு, அறங்காவலர்களை தேர்வு செய்தது வருகிறது. ஆனால்,   பெரும்பாலான கோவில்களில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து மத ஆர்வலர்கள் அறங்காவலர் மற்றும் குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தயங்குகின்றனர். இதை தமிழ்நாடு அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் 31,163 கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன, ஆனால் 20,600 கோயில்களுக்கு யாருமே விண்ணப்பிக்க வில்லை என்று தெரிவித்து உள்ளது.   மீதமுள்ள 10,563 கோவில் களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 6,814 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.

இந்து கோவில்களையும், கோவில் சொத்துக்களை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு அரசு,  அதன் வருமானத்தின் பெரும் பகுதியை கோயில் பணிகள் தவிர்த்து மற்ற பணிகளுக்கு செலவிட்டு வருகிறது. இது சட்ட விரோதமானது. மேலும்,  இதுவரை அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களில்  நியமிக்கப்பட்டுள்ள  அறங்காவலர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையே உள்ளது. இதன் காரணமாகத்தான்  கோவில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பெரியோர்களும், ஆன்மிக அன்பவர்களும், கோவில் அறங்காவலர் பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது.  தமிழ்நாடு அரசு, கோவிலை முழுமையாக அறங்காவலர்களிடம் ஒப்படைத்தால்,  அறங்காவலர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கும் நிலை ஏற்படும். ஆனால், அரசு கோவிலை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. இந்து கோவில்களை மற்ற மத வழிபாட்டு தலங்களைப் போல இந்து மக்களிடம் கொடுக்க மறுத்து வருகிறது என்பதே உண்மை.