ஐதராபாத்:
ஆப்பிள் நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் முதலீட்டை அதிகரிக்க செய்யும் நோக்கில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் 5க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு அவர் செல்கிறார். பல்வேறு தொழில் அமைப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இன்னோவா சொல்யூசன்ஸ், ஐ-இன்க் உள்ளிட்ட 5 மென்பொருள் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த பயணத்தின் போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெபி வில்லியம்ஸ்ஸை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய மூதலீட்டுத் திட்டத்தை ஆந்திராவில் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கனவே ஆந்திர அதிகாரிகள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தரப்பில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து பேசியிருப்பது கூடுதல் பலன்களை தரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் விரைவில் ஆப்பிள் நிறுவனம் ஆந்திராவில் தனது நிறுவனத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக ஆந்திராக அதிகாரிகள் உறுதிபட தெரிவித்தனர்.