டெல்லி: தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அப்போது முதலமைச்சருக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோ ரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்எல்ஏக்கள் அரசு தலைமை கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.
இவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்போது அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். அதேபோல திமுக தரப்பிலும் புகார் அளிக்கபட்டது.
சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சபாநாயகர் தமது அதிகாரத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறிய நீதிமன்றம் மனுக்களை முடித்து வைத்தது. ஆனால் சபாநாயகர் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காததையடுத்து, திமுகவின் கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
4 வாரங்களுக்குள் 11 எம்.எல்.ஏக்களும், சட்டசபை செயலாளர் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.