டெல்லி: மராடு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவருக்கும் தலா 24 லட்சம் ரூபாய் இழப்பீட்டை கேரள மாநில அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மராடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. கடலோர ஒழுங்குமுறை விதிமீறலால் இந்த நடவடிக்கை என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறியிருந்தது.
முன்னதாக, வீடுகளை காலி செய்யாததால், குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால், இழப்பீடு வழங்கப்பட வில்லை என்று பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். அந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இடைக்கால நிவாரணமாக குடியிருப்பவர்களுக்கு மொத்தமாக ரூ. 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியது. அப்போது ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.
மேலும், நீதிமன்றம் நியமித்த குழுவிடம் மராடு கட்டடத்தை கட்டிய நிறுவனம் 20 கோடி ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன் பிறகே முடக்கப்பட்ட வங்கி கணக்கை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க அளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.