புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்த விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம்.
நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் சமயத்தில், தயாராகியுள்ள நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழவே, கடைசிகட்ட தேர்தல் நடைபெறும் மே 19வரை அப்படத்தை வெளியிட தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றம் சென்று முறையிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தேர்தல் கமிஷன் முடிவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிவிட்டது.
மேலும், “இந்தப் படத்திற்கே யாரும் தடைவிதிக்கவில்லை. மாறாக, இதை எப்போது வெளியிட வேண்டும் என்பதில்தான் தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது” என்று குறிப்பிட்டனர் நீதிபதிகள்.