புதுடெல்லி: உத்திரப்பிரதேசத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக தானே முன்வந்து வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, அந்த மாணவி மற்றும் அவரின் சகோதரர் ஆகிய இருவரும் வேறு கல்லூரியில் சேர்ந்து தங்களின் படிப்பை தொடர்வதை உறுதி செய்தது.
மேலும், அந்த இருவருக்குமான விடுதி வசதியையும் தீர்மானித்த நீதிபதிகள், அந்த மாணவிக்கு அறிவுரையையும் வழங்கினர்.
நீதிமன்ற நண்பராக நியமிக்கப்பட்ட ஷோபா என்ற வழக்கறிஞரிடம் அவர்கள் கூறியதாவது, “கல்வி என்பது மிகவும் முக்கியமானது. சிறந்த கல்வி நிறுவனத்தில் அம்மாணவிக்கு இடம் கிடைத்துள்ளது. எனவே, அக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பை தொடருமாறு அம்மாணவியிடம் கூறுங்கள்.
கல்வியின் மூலமாக மட்டுமே இந்நாட்டில் மக்களால் முன்னேற முடியும்” என்று கூறியுள்ளனர். இவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளுள், தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி பானுமதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய அமைச்சரும், சாமியாரும், பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவருமான சின்மயானந்த் என்பவர் நடத்திவந்த சட்டக் கல்லூரியில் படித்துவந்த அந்த மாணவி, சம்பந்தப்பட்ட சாமியாரின் மீது குற்றம் சுமத்திய நிலையில், திடீரென காணாமல் போனார்.
ஆனால், அவர் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அம்மாணவியை சந்தித்த நீதிபதிகள், அவரின் குடும்பத்திற்கான பாதுகாப்பை உறுதிசெய்ததுடன், விசாரணையை கண்காணிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டனர்.