இறைவனை நம்பினால் எதுவும் நடக்கும் – ஆன்மிக சிறுகதை
இறைவன் மீது முழு நம்பிக்கை வைப்பது குறித்த ஒரு சிறுகதை இதோ
திரிலோக சஞ்சாரியான நாரதர் ஒரு சமயம் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க வந்தார். அப்போது தற்செயலாக மூவர் அவரைப் பார்த்துவிட்டார்கள். ஒருவர் பணக்காரர், இன்னொருவர், புலவர். மூன்றாமவர் சாதாரண கூலித்தொழிலாளி.
புலவரும், பணக்காரரும், நாரத மகரிஷியே, நீங்கள் பாற்கடல் வாசனை தரிசிக்கும் சமயத்தில், எங்களுக்கு வைகுந்த வாசம் கிடைக்குமா? என்று கேட்டுவந்து சொல்லுங்கள் என்று வேண்டினார்கள்.
ஏழைத் தொழிலாளி எதுவும் கேட்காமலிருந்தான். நாரதரோ, மூவருக்காகவும் கேட்டுவருவதாகச் சொல்லி, வைகுந்தம் சென்று பகவான் முன் நின்றார்.
அவரைப்பார்த்துச் சிரித்த பகவான், நாரதா, நடந்தவை எல்லாம் எனக்குத் தெரியும். நீ பூலோகம் போய், அந்த மூவரிடமும், நான் ஊசியின் காதில் யானையை நுழைத்துக் கொண்டு இருப்பதாகவும், அதைச் செய்த பிறகு பதிலைக் கேட்டுச் சொல்வதாகவும் கூறு, பிறகு உனக்கே எல்லாம் தெரியும் என்று கூறினார்.
மீண்டும் பூவுலகம் வந்த நாரதர், காத்திருந்த மூவரிடமும் நான் சென்றபோது, பகவான் ஊசியின் காதில் யானையை நுழைப்பதில் மும்முரமாக இருந்தார். அதனால் அவரிடம் பேச முடியவில்லை. உங்கள் கேள்விக்குப் பதிலை அப்புறம் கேட்டு வருகிறேன் என்று பரிதாபமாகச் சொல்வதுபோல் சொன்னார்.
அதைக்கேட்ட பணக்காரரும், புலவரும் பெரிதாகச் சிரித்தார்கள். ஊசியின் காதில் யானையை நுழைப்பதாம். முடியவே முடியாத அந்தக் காரியத்தை ஆண்டவன் செய்கிறார். கதை அளக்காதீர்கள்! என்று சொல்லி மறுபடியும் சிரித்தார்கள்.
ஆனால் கூலித்தொழிலாளி, நாரதர் சொன்னதை அப்படியே நம்பினான். ஆஹா… ஆஹா… ஆண்டவன்தான் எவ்வளவு வல்லமை படைத்தவர்! அவர் நினைத்தால் எதையும் செய்வார்! சின்னஞ்சிறு விதைக்குள் மாபெரும் மரத்தை ஒளித்து வைக்கும் அவரால், இது நிச்சயம் முடியும்! என்று பரவசத்தோடு கூறினான்.
நாரதருக்குப் பகவான் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அந்த ஏழைத் தொழிலாளியைப் பரிவுடன் பார்த்தார், அன்பனே, இறைவனால் எதையும் செய்யமுடியும் என நம்புபவர்க்கே அவன் துணை இருப்பான். உனக்கு நிச்சயம் வைகுந்த வாசம் கிட்டும் என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
உங்களுடைய நியாயமான கோரிக்கை ஏதுவாக இருந்தாலும் அதை ஈடேற்ற ஆண்டவனால் நிச்சயம் முடியும். ஆனால், அதற்கு நீங்கள் பகவான் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கவேண்டும். கடவுளால் முடியாதது எதுவுமே இல்லை என்று பரிபூரணமாக நம்புங்கள்.
உங்கள் வேண்டுதல் எத்தகையதாக இருந்தாலும் அது நிறைவேற அந்த தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் உங்களுக்குக் கைகொடுக்கும்.