ராய்ப்பூர்: இன்றைய நிலையில், நகர்ப்புற நக்ஸல் என்ற முத்திரையில், யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் நிலை நிலவுகிறது மற்றும் அது ஒரு பேஷனாகவும் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார் சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல்.
மாநிலத்தில் நக்ஸல் நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் குறித்து அவர் ஒரு நேர்காணல் அளித்தார். அதில்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு, “நகர்ப்புறங்களில் வாழ்ந்துகொண்டு, நக்சலைட்டுகளுக்கு பணம், உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குபவர்கள்தான் நகர்ப்புற நக்ஸல்கள். ஆனால், இன்றைய சூழலில், நினைத்தபடி யாரை வேண்டுமானாலும் அந்த வரையறைக்குள் கைதுசெய்யும் நிலை உள்ளது.
அதேசமயம், சத்தீஷ்கர் அரசோ, நகர்ப்புற நக்ஸல்கள் விஷயத்தில் சரியாக செயல்படுகிறது. இம்மாநிலத்தில், பல நில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை, மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
உண்மையில், நகஸல்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில், அப்பாவி மக்கள் பகடைக்காய்களாக பயன்படுத்துப்படுகின்றனர். பலபேர் அநியாயமாக தங்களின் உயிரை இழக்கின்றனர். இதுகுறித்து மாநில அரசு கவனத்தில் கொள்கிறது.
அரசிடம் அதிகளவிலான நக்ஸல்கள் சரணடைந்துள்ளனர். அந்த சரணடைவு எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்” என்று பகிர்ந்து கொண்டார் பூபேஷ் பாகல்.