சென்னை: பொங்கல் தொகுப்பு பையில் ஏதேனும் பொருட்கள் குறைந்தாலோ, ஏதானும் குறைபாடுகள் இருந்தாலோ, 180059935430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை யொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மஞ்சள் பை ஒன்றில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, முழு கரும்பு என மொத்தம் 21 பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த பொருட்கள் வழங்குவதில் சில பகுதிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. பல இடங்களில் பை கொடுக்கப்படுவதில்லை என்றும், சில பொருட்கள் விடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான. இதையடுத்து, ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டிலிருந்து பை கொண்டுவந்து பொங்கல் சிறப்புத் தொகுப்பைப் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதற்கு காரணமாக, பொங்கல் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பைகள் இன்றி பரிசுத் தொகுப்பு பெறும் பயனாளிகள் பின்னர் பைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் 180059935430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், புகார்களை ஆய்வு செய்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.