மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வரும் பிரபலங்களில் பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான அனுராக் காஷ்யப்பின் பங்களிப்பு மிகவும் பெரிய அளவில் இருந்து வருகிறது. இவர், சிஏஏ வுக்கு எதிராக வெளியிடும் கருத்துக்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துவதுடன் கூர்ந்து கவனிக்கவும் வைக்கிறது.
சிஏஏ வுக்கு எதிராகத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதுடன் நேரடியாகக் களத்திலும் இறங்கிப் போராடி வருகிறார். அவரது சமீபத்திய ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “பிரதமர் மோடி முதலில் தனது தந்தையின் பிறப்பு சான்றிதழைக் காட்ட வேண்டும்“, என்று கூறியுள்ளார்.
அனுராக் காஷ்யப் தனது ட்விட்டரில் மேலும் கூறியிருப்பதாவது, “குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த நினைக்கும் பிரதமர் மோடி கல்வி அறிவுள்ளவர் என்பதற்கு சான்றாக அவரது பொலிடிகல் சயின்ஸ் பட்டத்தைத் தான் காண விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
சிஏஏ வுக்கு எதிரான தனது கருத்துக்களை அதிரடியாக வெளிப்படுத்தி வரும் காஷ்யப், பிரதமர் மோடியை நோக்கி நேரடியாக்க் கேள்விகள் எழுப்புகிறார்.. அவர், “மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் ஆவணங்களைக் கேட்பதற்கு முன்னர், தனது தந்தை மற்றும் குடும்பத்தினரின் பிறப்புச் சான்றிதழைக் காட்ட வேண்டும்“, என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றுமொரு ட்வீட்டில், “இந்த அரசாங்கத்திற்குப் பேசத் தெரியவில்லை. இல்லையென்றால், அது உரையாடலைச் செய்திருக்கும். இவர்களால் எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்ள முடியாது. அவர்களிடம் தெளிவான திட்டமிடல் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல் சிஏஏ வும் ஒரு திட்டமிடல் இல்லாத, ஒரு தொலைநோக்கு இல்லாத, மக்களை ஏமாற்றும் ஒரு செயல்“, என்றார்.