மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்போர்னில், கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகம் உள்ளது. இதனால், அங்கு கடந்த 6 வாரங்களாக கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் மையப்பகுதியில் போராட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது பழங்களை வீசி எறிந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய 176 பேரிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கை தளர்த்துவதற்கு போராடுவதால், பொதுமக்கள் தங்கள் உயிருடன் விளையாடுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுவரை ஆஸ்திரேலியாவில் 26,651 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மொத்தம் 810 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 700 ஆக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 24 மணிநேரத்தில் ஆஸ்திரேலியாவில் 44 பேர் கொரோனாவால் பாதிப்படைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.