சமூக ஆர்வலரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான சதாஃப் ஜாபர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ் ஆர் தாராபுரி ஆகியோர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை ஏற்படுத்தியதாக கைதான நிலையில், அவர்களுக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறைகளை ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான சதாஃப் ஜாபர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ் ஆர் தாராபுரி ஆகியோர் கடந்த டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி லக்னோ நீதிமன்றத்தில் இருவர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருவருடன் சேர்த்து மொத்தம் 13 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஜாமீன் கிடைத்து மூன்று நாட்களுக்கு பின்னர், இருவரும் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நகரத் தலைவர் முகேஷ் சிங் சவுகான், ”இருவரும் காலை 10 மணியளவில் சிறையிலிருந்து வெளியே வந்தனர். நான் அவர்களைப் அழைத்து வர, மற்ற கட்சி அலுவலக பொறுப்பாளர்களுடன் அங்கு இருந்தேன். எங்கள் கட்சி சி.ஏ.ஏவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டுள்ளதோடு, அமைதியான முறையில் போராடுபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்தும் மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கும் எதிரானதாகவே இருக்கிறது” என்று தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று, இவருக்கும் தலா ரூ .50,000-க்கு இரு ஜாமீன் பத்திரங்களையும், அதற்கு சமமான தனிப்பட்ட சொத்து பத்திரங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த டிசம்பர் 20 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாராபுரி மற்றும் ஜாபர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி), 332 (அரசு ஊழியரை தனது கடமையில் இருந்து விலக்குவதற்கு தானாகவே காயத்தை ஏற்படுத்துகிறது), 353 (அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுப்பது), 147 (தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவது) மற்றும் 120-பி (குற்றவியல் சதி செய்வது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, மெஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னதாக நிராகரித்திருந்தது.
மொத்தமாக லக்னோவின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 19ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக 42 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
லக்னோவில் வசிக்கும் ஜாஃபர், ஆசிரியர், கவிஞர், ஆர்வலர், நடிகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். இவரை காவல்துறையினர் பரிவர்த்தன் சவுக்கில் கைது செய்தனர். டிசம்பர் 24ம் தேதி, சிறையில் ஜாஃபரை சந்தித்த காங்கிரஸ் குழு உறுப்பினர்கள், காவல்துறையினர் தங்களை அடித்து, உதைத்ததாக தெரிவித்திருக்கின்றனர்.
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சர்வன் ராம் தராபுரி 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றதிலிருந்து, உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு தோற்ற அவர், ஓய்வு பெற்ற பிறகு, தாராபுரி மனித உரிமைகள், பெண்கள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் சமூக நீதி இயக்கங்களுக்கு ஆதரவாக பணியாற்றி வருகிறார். அத்தோடு ஏழைகளையும், தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் மேம்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த திங்களன்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாகவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுவிப்பது தொடர்பாகவும், ஆளுநரின் நேரடி தலையீடு தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.