ஷாக்தோல்:
மத்திய பிரசேதம் மாநிலம் ஷாக்தோல் மாவட்டத்தில் இன்று மேலும் ஒரு புலி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
தலைநகர் போபாலில் இருந்து 550 கி.மீ., தொலைவில் உள்ள ஜெய்தஹரி வட்டாரம் தேவகரா கிராமத்தில் இன்று காலை 6 மணிக்கு புலி இறந்துகிடந்ததை கிராம மக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 5 வயது கொண்ட அந்த புலி விவசாயி ஒருவரது நிலத்தில் இறந்துகிடந்தது.
இதையடுத்து மூத்த அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் லேசான மின் அதிர்ச்சி காரணமாக புலி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. தலையிலும் காயம் உள்ளது. மூக்கில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சந்தேகிக்ன்றனர்.
தகவலறிந்து அப்பகுதியில் மக்கள் அங்கு கூடி இறந்த புலி முன்பு செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். இறந்த புலி உடல் பிரேத பரிசோதனை நாளை நடக்கிறது. இந்த புலி அருகில் உள்ள சஞ்சய் துப்ரி புலிகள் காப்பகத்தில் இருந்துள்ளது. சமீபத்தில் ஒரு கேமராவில் இந்த புலியின் நடமாட்டம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தில் மட்டும் இதோடு சேர்த்து 6 புலிகள் இறந்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 61 புலிகள் இறந்துள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் 30 புலிகள் இறந்துள்ளது. இந்தியாவிலேயே மத்திய பிரதேசத்தில் தான் புலிகள் இறப்பு அதிகமாக உள்ளது. இது வன உயிரின ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.