சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காதல் விவகாரத்தால் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளம்பெண் முருகன் என்ற இளைஞரின் ஒருதலைக் காதல் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் நினை வலைகள் இன்னும் நீங்காத நிலையில், அவ்வப்போது மேலும் நிகழ்வுகள் சென்னையில் அரங்கேறி உள்ளது.
இந்த நிலையில், சென்னை பரங்கிமலை (மவுண்ட்) ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் வந்துகொண்டிருந்த ரயில் முன் தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலை செய்த நபர் யார் என விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட மாணவி தனியார் கல்லூரியில் படிக்கும் சத்யா (20) என்பது தெரிய வந்துள்ளது. அவரை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாய்த்தகராறு அதிகரித்த நிலையில், அந்த இளம்பெண்ணை இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையம் வந்துகொண்டிருந்த ரயின் முன்பு தள்ளி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினார். இந்த விபத்தில், தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சதீஷ்-ஐ தேடி வருகின்றனர்.
விசாரணையில், சதீஷ் சந்திதா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டார் என கூறப்படுகிறது. இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த ரயில்பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் சத்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சதீஷ் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.