கடலூர்: கடலூர் மாவட்டம் பூவனூர் அருகே தண்டவாளத்தை கடந்த பள்ளி வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு (ஜூலை மாதம்) கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன், நிலைதடுமாறு கவிழ்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை வழக்கம் போல பள்ளிகள் திறந்த நிலையில், கடலூர் மாவட்டம் பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன், ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்து 6 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனட். விபத்து நிகழ்ந்த உடனேயே அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து வேனை தூக்கி அங்கிருந்து அகற்றினர். வேன் கவிழ்ந்த நேரத்தில் அவ்வழியாக ரயில் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு விருத்தாசலத்திற்கு அருகே உள்ள பூவனூர் இரயில் நிலையத் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் தடுமாறி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
அப்போது பள்ளி மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தண்டவாளத்திற்கு அருகே வந்து மாணவர்களை உடனடியாக வெளியேற்றினர். இருப்பினும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தகவலறிந்து உடனே மருத்துவமனைக்கு பிள்ளைகளைக் காண சென்றுள்ளனர்.