புதுடெல்லி: மோடியின் அமைச்சரவையில் இணைந்துள்ள ஒடிசாவின் எளிய அரசியல்வாதி என்று போற்றப்படும் பிரதாப் சந்திர சாரங்கி, சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், அவரின் இன்னொரு பக்கம் வேறொரு மாதிரியானது.
மிகவும் எளிமையான தோற்றத்தில் காட்சிதரும் சாரங்கி, ஒடிசாவில் பஜ்ரங்தள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பஜ்ரங்தள் அமைப்பினரின் பங்கு உறுதிசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.
இந்த நிகழ்வில், 2 குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்த போதிலும், ஒடிசாவில் நிகழும் மதமாற்ற நடவடிக்கைகள் குறித்த கடுமையான எதிர்க் கருத்து கொண்டவர் சாரங்கி.
மேலும், கடந்த 2002ம் ஆண்டு ஒடிசாவின் சட்டப் பேரவை மீது இந்து வலதுசாரி அமைப்புகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திலும், சாரங்கி கைது செய்யப்பட்டார். கலவரம் செய்தல், தாக்குதல் மற்றும் அரசின் சொத்துக்களை சேதப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இவரின் எளிமையான தோற்றம் மற்றும் வாழ்க்கை குறித்த சம்பவங்களே முக்கியத்துவம் பெறுகின்றன.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிஜு ஜனதாதள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பணக்கார வேட்பாளர்களை எதிர்த்து ஒடிசாவின் பாலசோர் தொகுதியில் பெற்ற வெற்றியானது, கோலியாத் என்ற பிரமாண்ட வீரனை எதிர்த்து, சிறிய மற்றும் எளிய சிறுவனான டேவிட் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடப்படுகிறது.