மியான்மரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவானதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாகின.
ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில நிமிட நேரம் வரை நீடித்ததால் மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரின் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆட்டம் கண்டதுடன் அதில் இருந்த இன்பினிட்டி நீச்சல் குளங்கள் வெகுவாக குலுங்கியதில் அதிலிருந்த தண்ணீர் நீர்வீழ்ச்சி போல் சில மீட்டர் தூரம் சாலையில் தெறித்து விழுந்தது.
இந்த நிலையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 80 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.