பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மேலும் ஓர் ஊழல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 68.14 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சித்தராமையா முதல்வர் பதவியில் விலகுவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில், முதல்வர் பதவியை பிடிக்க அங்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஊழல் வழக்கில் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
ஏற்கனவே சித்தராமையின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதியின் கோரிக்கைபடி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவாகி உள்ளது. கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவின் முந்தைய ஆட்சியில் அரசுக்கு விளம்பரக் கட்டணம் அளிக்காமல் மோசடி செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவரான என்.ஆர். ரமேஷ் புகார் அளித்துள்ளார் இந்தபுகாரின்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பெங்களூரு எம்எல்ஏக்கள்/எம்.பி.க்கான சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் என்.ஆர். ரமேஷ் புகார் அளித்துள்ளார். அதில், , “கர்நாடகத்தில் 2013 முதல் 2018 வரையிலான சித்தராமையாவின் ஆட்சியில், பெங்களூரு மாநகராட்சியின் பேருந்து பணிமனைகளில் அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை பரப்புவதற்கான கட்டணமாக ரூ. 68.14 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால், அந்த கட்டணத்தை முதல்வர் சித்தராமையா செலுத்தாமல் இருந்தார். சொத்து வரி, வரைபட ஒப்புதல் கட்டணம், வர்த்தக உரிமக் கட்டணம், சாலை தோண்டுதல் கட்டணம், விளம்பரக் கட்டணம் முதலானவை மூலம் கிடைக்கும் வருவாய் ஆதாரங்களைக் கொண்டுதான், அந்தந்த துறைகளின் அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்திற்காகவும், பூங்காக்கள், தெரு விளக்குகள், சேதமடைந்த சாலைகளின் பராமரிப்புக்காகவும்தான், பெங்களூரு மாநகராட்சியில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.
இந்த நிலையில்தான், கர்நாடக அரசுக்கு சித்தராமையாவின் அரசு மொத்தம் ரூ. 12.98 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று, அப்போதைய பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு நிதி ஆணையர் 2017 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் தேதியில் கோரிக்கை அறிவிப்பு விடுத்திருந்தார். இருப்பினும், ஆணையரின் கோரிக்கையை சித்தராமையா அரசு புறக்கணித்து விட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த கட்டண மோசடி புகாரை, இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த சித்தராமையா அரசு முற்றிலும் மூடி மறைத்து விட்டது. அதாவது, சித்தராமையா அரசின் அழுத்தம் காரணமாக, எந்த அறிவிப்பும் இல்லாமல் 68.14 கோடி ரூபாய் மோசடி புகாரை, லோக் ஆயுக்தா காவல்துறை 2024 ஆம் ஆண்டில் ஜூலை 26 ஆம் தேதியில் முழுவதுமாக மூடியது.
இந்த நடவடிக்கையை எதிர்த்துதான், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு தனியார் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா மற்றும் இதில் தொடர்புடைய பிறருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் தனியார் புகார் பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதியின் கோரிக்கைபடி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விலை அதிகமுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்அளித்தனர்.
முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தேவை என்பதால், சமூக ஆர்வலர்கள் மூவரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை தனித்தனியாக சந்தித்து புகார் அளித்தனர். அதில் முதல்வர் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர்.
இதையடுத்து ஆளுநர் கடந்த 26-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா, அமைச்சரவையைக் கூட்டி நோட்டீஸை திரும்ப பெற வலியுறுத்தினார். ஆளுநர் தனது நோட்டீஸை திரும்ப பெறாததால் சித்தராமையா, தான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என ஆளுநருக்கு பதிலளித்தார்.
இந்த பதில் திருப்தி அளிக்காததால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
இதுதொடர்பாக அவர் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகிய மூவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 மற்றும் பிரிவு 218-ன் கீழ் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குதொடர அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் புகார்களில் சிக்கியுள்ள சித்தராமையா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது, சித்தராமையா முதல்வர் பதவி கேட்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதும், அவரே முதல்வராக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால், முதல்வர் பதவி கனவில் இருந்து வந்த டி.கே.சிவகுமார் உள்பட பல மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், தற்போது சித்தராமையா மீது ஊழல் புகார் பதியப்பட்டு உள்ளதால், அவரை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சிலர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டு தேசிய தலைவரான கார்கே உள்பட சிலரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் கர்நாடகா மாநில காங்கிரஸில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் சித்தராமையாவே தொடர்ந்து நீடிப்பார் என டெல்லி தலைவர்கள் கூறி வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எம்.பி. பாட்டீல், சிவானந்த் பாட்டீல் ஆகியோர் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். மேலும் அமைச்சர் டி.கே.சிவகுமாரும் முதல்வர் பதவிமீது கண் வைத்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மூத்த காங்கிரஸ் தலைவர் சிவானந்த் பாட்டீல், காங்கிரஸ் கட்சியில் “கட்சிக்காக உழைத்தவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் (டிகே சிவக்குமார்) கடுமையாக உழைத்து கட்சியை கட்டி எழுப்பினார். அவர் முதலமைச்சர் ஆக விரும்பினார். ஆனால், இறுதியில் வேறு ஒருவர் முதல்வர் ஆனார். மற்றவர்களுக்கும் ஜூனியர்களுக்கும் முதல்வர் ஆகும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சித்தராமையாவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்ததை எம்.பி. பாட்டீல் மறந்துவிட்டார். இதை நான் அவருக்கு நினைவூட்ட மாட்டேன். கட்சியில் அவருக்கு (எம்.பி. பாட்டீல்) சீனியர்கள் பலர் உள்ளனர். கட்சியில் மூத்தவர்கள் இல்லையா? அவர் காத்திருக்க வேண்டும். மூத்தவர்கள் இருக்கும்போது நீங்கள் காத்திருக்கக் கூடாதா? என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய எம்.பி. பாட்டீல், “கட்சி முடிவு செய்து உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் (முதல்வர் பதவிக்கு), சீனியர், ஜூனியர் என்ற கேள்விக்கே இடமில்லை. இன்றைய நிலவரப்படி, (முதல்வர் பதவி) காலியாக இல்லை. ஆனால், ஒரு நாள், இயல்பாக, எனக்கு அந்த பதவி கிடைக்கும். அதில், எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜேடிஎஸ்/பாஜகவில் இருந்து வந்துள்ளதால், சிவானந்த் பாட்டீலுக்கு வாய்ப்பு வெகு தொலைவில் உள்ளது” என்றார்.
எம்.பி. பாட்டீல், சிவானந்த் பாட்டீலை தவிர கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியும் முதலமைச்சராக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.