டில்லி
முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மொத்தம் 3 ஆணையர்கள் நியமிப்பது வழக்கமாகும். இவர்களில் ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இயங்குவார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவி வகித்து வருகிறார்.
மற்ற இரு ஆணையர்களில் ஒரு ஆணையராக ராஜிவ் குமார் பதவி வகித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் மற்றொரு ஆணையர் பதவி காலியாக உள்ளது. இந்த காலி இடத்துக்கு உத்தரப் பிரதேச முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனூப் சந்திர பாண்டேவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
நேற்று இரவு சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 1984 ஆம் ஆண்டு ஐ ஏ எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் அனூப் சந்திர பாண்டே. இவர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.