கன்னடத்தில் வெளியாக இருக்கும் ‘அரபி’ படத்தில் நடிப்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த இரண்டு கைகளும் இழந்த மாற்றுத்திறன் படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
‘அரபி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிக்க அண்ணாமலையை அதன் இயக்குனர் அணுகியதும் இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால் ஒரு ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு அதில் நடித்திருக்கிறார் அண்ணாமலை.
நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் அண்ணாமலையின் நடிப்பைக் காண ஆவலுடன் காத்திருந்த அவரது தொண்டர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பா.ஜ.க. தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கன்னடப் படம் மூலம் திரைத்துறையிலும் அண்ணாமலை கால்பதித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.