கோயம்புத்தூர்
பாஜக அதிமுக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளிடம்,
“அ.தி.மு.க.வின் நிலைபாடு நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் மோசமான நிலைகள் நிகழ்ந்து வருகிறது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. தி.மு.க. மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும். \.
அதுதான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் சிதறாமல் வாக்குகளை ஒருங்கிணைத்து தி.மு.க.வை வீழ்த்துவதுதான் அ.தி.மு.க.வின் தலையாய கடமை. அ.தி.மு.க. கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்”
என்று கூறியிருந்தார்.
மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி இல்ல விழாவில் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்ற நிலையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமையலாம் என பேச்சு எழுந்துள்ளது .
இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை,
“இது அவசரத்தில் பேசும் சப்ஜெக்ட் அல்ல.. சென்னையில் நாளை பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். கூட்டணி குறித்து அவசரகதியில் இப்போது எதையும் சொல்ல முடியாது. அமித்ஷா இரண்டு நாளில் மீண்டும் தமிழகம் வர உள்ளார். அமித்ஷா தமிழகம் வரும்போது இன்னும் பல மாற்றங்கள் நிகழும்”
என்று பதில் அளித்துள்ளார்.