சென்னை: ஜூலை 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில்  பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழகஅரசு புறக்கணித்த நிலையில், 29ந்தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மற்றும் கவர்னர் கலந்துகொள்வதால், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியும் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடத்துவதில் கால தாமதம் ஆகிவருவதால், பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டச் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் தேர்ச்சிக்கான பட்டச் சான்றிதழை  இணைப்பு கல்லூரிகளுக்கும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்,  மாணவர்களாலும், பட்டச் சான்றிதழ் பெற முடியவில்லை. எனவே, இனியும் தாமதமாகாமல் பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்தி மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்க வேண்டும் என கல்லூரிகள் மற்றும் மாணாக்கர்கள் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ஜூலை 29ம் தேதி  பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.  மாணவ மாணவிகளுக்கு பிரதமர்  பட்டங்களை வழங்குகிறார். மேலும், இவ்விழாவில் ஆளுநர், முதலமைச்சர் முக ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.