சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை  கண்டித்து ஜனவரி 3ந்தேதி  மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக மாநில பாக தலைவர்  அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்  ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது. எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசை கண்டித்து,   தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை டூ சென்னை நீதிப்பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.

வரும் “ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த டிச.27-ம் தேதி தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து தற்போது தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதிப் பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.