சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தமிழக மக்களிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று மதியம் கவனர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிஒருவர், திமுக பிரமுகர் ஒருவரால் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், சென்னை மாநகர காவல்ஆணையர் ஒருவருக்கு மட்டுமே தொடர்பு என கூறியது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாலியல் பலாத்காரம்,  அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் போராட்டம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த பரபரப்புக்கு மத்தியில், இன்று   காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அக்கடிதத்தில்,  திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இதுகுறித்து பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என கடுமையாக விமர்சனம் செய்ததுடன், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, இன்று மதியம், சென்னை  கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை   சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், விஜய் அளித்த மனுவில்,  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்

கவர்னருடனான சந்திப்பின் போது விஜயுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.