சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் உள்பட கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்தஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சிலர் வழக்கு தொடர்ந்தனர். யுஜிசியும் அரியர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அரியர் தேர்வு என்ற தமிழகஅரசின் அறிவிப்புக்கு தடை விதித்தது,

இந்த நிலையில், நேற்று வழக்கின் விசாரணையைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கான தேர்வு தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி, தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என்றும், தேர்வுகள் பிப்ரவரி 16ந்தேதி தொடங்கி மார்ச் 28ந்தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது. இதனால் சுமார் 5 மாதமாக இழுபறியாக இருந்து வந்த மாணவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு பல்வேறு வகுப்புகளுக்கு தேர்வு நடத்தாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதன்படி 2020ம்ஆண்டு ஆகஸ்டு 26ந்தேதி  தமிழக முதல்வர் அதிரடியாக அரியர் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தார். இது  மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்படி, இறுதி பருவத்தேர்வைத் தவிர பிற செமஸ்டர்களில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும், எத்தனை அரியர் வைத்திருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்தி, தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தால் தேர்வு எழுதுவதில் விலக்கு. தேர்வு எழுத தேவையில்லை. அதாவது அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என்றும், அனைத்து கல்லூரி மாணவர்களும் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்கு மத்திய கல்வி வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கல்வியாளர்களும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, அரசின் உத்தரவுக்கு நீதிமன்றமும் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அரியர் மாணவர்களுக்கு தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

அதன்படி அரியர் தேர்வுகள் வரும் 16ந்தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 28ந்தேதியுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளது. தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும்,  எந்தெந்த பாடங்களுக்கு எந்த நாளில் தேர்வு என்பதை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 5 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அரியர் மாணவர்களின் அலைக்கழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.