ராலேகான் சித்தி:
லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளார்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது விசாரணை நடத்தும் வகையில், லோக்பால் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஏற்கனவே உண்ணா விரத போராட்டம் இருந்தபோது, விரைவில் லோக்பால் கொண்டு வரப்பபடும் என மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ஆனால், தற்போது வரை லோக்பால் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாக வில்லை. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அன்னா ஹசாரே கடிதம் எழுதினார்.
அதில், மத்திய அரசு தனக்கு கொடுத்த உறுதிமொழிகளை காப்பாற்றத் தவறி விட்டதால், காந்தி நினைவு தினமான ஜனவரி 30ம் தேதி முதல் தனது உண்ணா விரதத்தை துவங்கப் போவதாகத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி தனது சொந்த கிராமமான மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் உண்ணா விரதத்தை தொடங்கி உள்ளார்.
தனது உண்ணாவிரதம் எந்த கட்சியையும் எதிர்த்தோ மற்றும் தனிப்பட்ட நபரை எதிர்த்தோ நடத்தப்படவில்லை என்றும், நாட்டின் நலனுக்காகவே உண்ணாவிரதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.