மும்பை:

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என கிரிக்கெட் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளேவின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிகிறது.
இதனால் புதிய பயிற்சியாளர் நியமனத்துக்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், இந்திய ‘ஏ’ அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் பைபஸ் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் கும்பிளே ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் லண்டனில் கூடி சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என கிரிக்கெட் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்து உள்ளார். புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் வரை நீடிக்கப்படுவதாக கூறிஉள்ளார்.

ஜூன் 23-ம் தேதி முதல் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. ஜூலை 9-ம் தேதி ஒரேயொரு டி-20 போட்டி உள்ளது.