மும்பை:
மூக செயற்பாட்டாளரும், அறிஞருமான ஆனந்த் டெல்டும்ப்டே இன்று (ஏப்ரல் 14) மும்பையில் சரணடைந்ததை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

பீமா கோரேகான் வன்முறை சம்பவத்துடன் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்ப்டே, சிந்தனையாளர், ஆய்வாளர், சிறந்த நூல்களை எழுதிய எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். அம்பேத்கரின் உறவினரான இவர், மார்க்சியத்திற்கும் அம்பேத்கரியத்துக்கும் இடையேயான உறவு, முரண் பற்றி தொடர்ந்து எழுதியுள்ளார். தலித் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து பேசிவரும் ஆனந்த் டெல்டும்ப்டே, ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

ஆனந்த் டெல்டும்ப்டேவுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அரசுக்கு எதிராக அவர் சதித்திட்டம் தீட்டுவதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று புனேவில் நடைபெற்ற எல்கார் பரிஷத் கூட்டத்திற்கு பின் வெடித்த வன்முறைக்காக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆனந்த் டெல்டும்ப்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சயமத்தில், பல்வேறு செயற்பாட்டாளர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் அடிப்படையில், பிரதமரை கொல்ல ஆனந்த் டெல்டும்ப்டே திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் தற்போது மும்பையில் சரணடைந்துள்ளார். சரணடைவதற்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என்னுடைய வீட்டில் போலீஸ் தேடுதல் நடத்தியபிறகு எனது உலகம் முற்றிலுமாக திசை திரும்பிவிட்டது. எனக்கு நேர்ந்தவற்றை எனது மோசமான கனவுகளிலும் நான் எதிர்பார்க்கவில்லை. 30 புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள், கருத்துகள், நேர்காணல்களில் வன்முறைக்கும், வன்முறை சார்ந்த இயக்கங்களுக்கும் ஒருபோதும் ஆதரவு தெரிவித்ததில்லை. ஆனால், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனது இந்தியா சீரழிக்கப்படும் சமயத்தில், மிகச்சொற்ப நம்பிக்கையுடன் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தற்போது நான் என்ஐஏ காவலுக்கு செல்கிறேன். இதன்பின் நான் எப்போது பேசுவேன் என தெரியாது. ஆகையால், உங்களுக்கும் இந்த நிலைமை வருமுன் வாய்திறந்து பேசுவீர்கள் என நம்புகிறேன். இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 13 கடிதங்களில் ஐந்து கடிதங்களின் அடிப்படையில் என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் என்னிடமிருந்து அவர்கள் எதுவும் கைப்பற்றவில்லை. அக்கடிதங்களில் ஆனந்த் என்ற பெயர் உள்ளது. ஆனந்த் என்பது இந்தியாவில் பிரபலமான பெயர். ஆனால் கேள்விகேட்காமலே போலீசார் என்மீது குற்றம்சுமத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகாவின் ஜாமீன் மனுக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது அவர்களுக்கு நீதிமன்றம் சார்பில் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்களின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடினர். மார்ச் 17ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது. மேலும், இருவரும் மூன்று வாரங்களுக்குள் சரணடையும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.