திருப்பதி

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நேற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்ற பிறகு மாலை தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன்ஷ் ஆகியோருடன் சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிறகு திருப்பதி மலைக்கு சென்ற அவரை கோவில் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கிய அவர் இன்று காலை வி.வி.ஐ.பி தரிசனத்தில் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.பிறகு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.

அப்போது சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம்,

” மாநிலத்தில் மக்கள் ஆட்சி தொடங்கியுள்ளது. இந்த மாநிலம் செழிக்க பிரார்த்தனை செய்தேன். மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். இன்று முதல் நல்லாட்சி ஆரம்பமாகிறது. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன். 2047-க்குள் தெலுங்கு மக்கள் உலக அளவில் முதலிடத்தைப் பெறுவார்கள். ஆந்திராவை நாட்டிலேயே முதல் மாநிலமாக மாற்றுவேன். அரசியல் சதிகளை சகித்துக்கொள்ள மாட்டோம். குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நல்லவர்களை பாதுகாப்போம், கெட்டவர்களை தண்டிப்போம். திருமலையில் இருந்து சுத்திகரிப்பு ஆட்சியைத் தொடங்குவேன்”

என்று கூறியுள்ளார்.