கொரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று காலை கண்விழித்த போது என் ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களை காணமுடிந்தது. என் வீட்டு பால்கனியின் அருகே உள்ள மாமரத்தில் இந்த மிகப்பெரிய தேன் கூட்டை கண்டேன்.
https://www.instagram.com/p/CAoEyYjp8nV/
நான் தேனீக்களுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் நான் அவற்றினால் கடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவற்றை எந்த துன்புறுத்தலுமின்றி வேறு இடத்துக்கு நகர்த்த சிலரை அழைத்தேன். இறுதியாக என் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அவற்றின் மீது பூச்சிக் கொல்லி அடித்து அவற்றை கொல்வது, இன்னொன்று அவற்றோடு வாழப் பழகிக் கொள்வது.
எனக்கு பறக்கும் பூச்சிகள் என்றால பயம்தான், எனினும் நான் பாதுகாப்பாக இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. இந்த உயிரினங்கள் மீது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறேம். ஏனெனில் நம் சுற்றுசூழல் அமைப்பில் அவற்றின் பங்கு இன்றியமையாதது. தேனீக்கள் அழிந்தால், அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான். இது தேனீக்களை பற்றிய கதைதான் என்றாலும் இது நம் நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை பற்றியதும்தான்.
என் பால்கனியில் இருக்கும் தேனீக்களுக்கு நான் பொறுப்பென்றால், நம் நாடு முழுவதும் நிர்கதியாகியுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு.
ராணி தேனீ மிகவும் புத்திசாலி. தனது தொழிலாளி தேனீக்கள் இல்லாமல் தான் இல்லை என்பது அதற்கு தெரியும், தேன் கூடு சிறப்பாக இயங்கவேண்டுமென்றால் தொழிலாளி தேனீக்கள் அதற்கு வேண்டும்.
தேனீக்களிடமிருந்து மனிதர்களாகிய நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது என கூறியுள்ளார்.