சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநில அரசாங்கங்கள், சூழ்நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் லாக் டவுனை செயல்படுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. ஆந்திராவிலும் கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்கள் ஆன நிலையில் சித்தூர் மாவட்டத்தில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே அதிக மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.