அமராவதி: மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் தொகு மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு என மத்திய பாஜக அரசுக்கு எதிராக அரசியல் செய்யப்படும் நிலையில், மாநில மக்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 5 முதல் 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ள  சந்திரபாபு நாயுடு “மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது”  என்றும் கூறியுள்ளார்.

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” . இது மக்கள் தொகை மேலாண்மையிலிருந்து வேறுபட்ட விஷயம் என்றும், தற்போதைய அரசியல் பிரச்சனைகளுடன் இதை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு , மும்மொழி கொள்கையை வரவேற்றும் கருத்து தெரிவித்து உள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில்  தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும், தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது.

தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது என்றால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது” என பேசியிருந்தார்.  ஆனால்,  முதல்வர் பேசுவது போல தமிழக மக்களிடைய மும்மொழி கொள்கைக்கும், தொகு மறுசீரமைப்புக்கும் அந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை.

இந்த நிலையில், மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து,  நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு பேசியிருக்கிறார். அதாவது, தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு அனைவரிடமும் உரிய நேரத்தில் ஆலோசனை நடத்தும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தோடு, ‘மக்கள் தொகை மேலாண்மைக்கும் தொகுதி மறு சீராண்மைக்கும் சம்பந்தம் இல்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

 “மக்களவை தொகுதி மறுவரையறை என்பது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொடர் செயல்முறை. எனவே, அதுவும் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பதும் வேறு.. வேறு.. என்பது புரிந்து கொள்ளவேண்டும். தொகுதி மறு சீரமைப்பு என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான ஒரு விஷயம். இது மக்கள் தொகை மேலாண்மையிலிருந்து வேறுபட்ட விஷயம் என்றும், தற்போதைய அரசியல் பிரச்சனைகளுடன் இதை சேர்க்க கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். எனவே, இது நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தேசத்தின் நலன் கருதி இதை சொல்கிறேன். தொகுதி மறுவரையறை குறித்து மசோதா எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதனால் இப்போது ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கைகளால் பல நாடுகள் மனித வளங்களை நிர்வகிப்பதில் தோல்வியடைந்துள்ளன என்று சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டினார். இதனால், குடும்பக் கட்டுப்பாடு குறித்த தனது கருத்துக்களை மாற்றிக்கொண்டதாகவும், மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை இப்போது உறுதியாக நம்புவதாகவும் கூறினார்.

இந்திய மக்கள்தொகை பற்றிப் பேசுகையில், தென்னிந்தியாவில் வயதான பிரச்சனை தொடங்கிவிட்டது. மத்திய அரசு அல்லது நிதி ஆணையம் மக்கள்தொகையை ஊக்குவிக்க வேண்டும். இன்று வயதான பிரச்சனைகள் உள்ளவர்களை தண்டிக்காதீர்கள். அதிக குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை கொடுங்கள் என்று வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு கூறி வரும் நிலையில், அதனை மறைமுகமாக சாடியுள்ளார் சந்திரபாபு நாயுடு. இது தொடர்பாக பேசிய அவர்,” என் மாநிலத்தில் மூன்று மொழியல்ல 10 மொழி கூட படிக்க வேண்டும் என கூறுவேன். அப்படி நன்றாக அணனத்து மொழியிலும் படித்தால் தான் வேலை கிடைக்கும். தாய் மொழி அறிவை வளர்க்க உதவும் மற்ற மொழி பணிபுரிய உதவும்” என்றார்.

அதுபோல, தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்தும் தனது கருத்தினை ஆணித்தரமாக தெரிவித்து உள்ளார்.

டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர்  செய்தியாளர் சந்திப்பில் மும்மொழி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “மொழி என்பது தகவல் தொடர்புக்கான ஒரு கருவிதான். தாய்மொழி மூலம் மட்டுமே அறிவை வழங்க முடியும். தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற உள்ளூர் மொழிகளில் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். கூகுள் தலைமை அதிகாரி கூட ஒரு தமிழர்தான். எனவே அறிவு வேறு, மொழி வேறு” என்றார்.

தொடர்ந்து பேசியவர், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்கும்.சர்வதேச அளவில் வாழ்வாதாரத்திற்கான மொழியாக ஆங்கிலம் இருப்பதால் அதனையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களுடன் எளிதில் பழக இந்தியை கற்றுக் கொள்வது நல்லது.

இதனால், ஆந்திராவிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், 3 மொழிகள் மட்டுமல்ல 10 சர்வதேச மொழிகளை ஊக்கவிக்க முயற்சி எடுக்கப்படும். இந்தியை கற்றுக்கொண் டால் மக்களுடன் பழக எளிதாக இருக்கும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆங்கிலத்தையும், தெலுங்கையும், தங்கள் அரசு ஊக்குவிக்கும்” என்று கூறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதே நேரத்தில் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர், அவர்கள் மேலும் சாதிக்க மும்மொழி அவசியம் என்றவர், ,”தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்று, மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர். அங்கு உயர் பதவிகளில் இருக்கும் பலர் தமிழர்கள்தான். ஐஏஸ் தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்க டெல்லி வருபவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் அது தமிழ்நாடுதான் என்ற நிலை இருக்கும், தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுக்க பயணிக்கிறார்கள்” அதற்கு மேலும்சில மொழிகள் அறிந்து கொள்வது நல்லதே என்றார்.