அமராவதி: கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என சந்திரபாபு நாயுடு தலைமையிலான  ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோயில்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் புனிதத்தைப் பாதுகாக்க 1987 ஆம் ஆண்டு ஆந்திர அறநிலையத்துறை மற்றும் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைச் சட்டம் பிரிவு 13 (1) க்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அறநிலையத்துறைகள் மூலம் இந்துகோவில்களின் வழிபாட்டு நடைமுறைகள் முடக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.  இந்து கோவில் நிர்வாகங்கள் மீத இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆதிக்கம் இருப்பதால், பூஜை, நைவேத்திய வேளைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. ஒருசில மதவிரோத அதிகாரிகள்,  கோவில்களில் நடைபெறும் ஆகம விதிகள், சம்பிரதாயங்களிலும் தலையிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.  இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, இனிமேல்,  கோயில்களில் பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகள், ஆகம விதிகளில் மாற்றங்கள் செய்யப்படாதவாறு, ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.   இந்து கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஆகம சாஸ்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையிட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என உத்தரவிட்டு ஆந்திர மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி,  அனைத்து இந்து கோயில்களிலும் ஆகம விதிகளின்படி அந்தந்த சம்பிரதாயங்களை கடைபிடிக்கலாம் என்று கோயில் அர்ச்சகர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் வகையிலான அரசாணையை கோயில்கள் அனைத்திலும், பூஜை முறைகள், யாகங்கள், உற்சவங்கள் போன்றவற்றை அந்தந்த கோயில்களின் சம்பிரதாய முறைப்படி நடத்த தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, அந்தந்த கோயில் அர்ச்சகர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதை ஆந்திர மாநில அர்ச்சகர்கள் மற்றும் பிராமண சங்கத்தினர் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

தற்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணையின்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை, துணை, உதவி ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட இனி ஆகம சம்பிரதாய விவகாரங்களில் தலையிட முடியாது. அனைத்து ஆகமா விவகாரங்களும் மூத்த அர்ச்சகர் அல்லது பிரதான அர்ச்சகர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால், மூத்த ஆகம வல்லுநர்கள் மற்றும் அர்ச்சகர்களுடன் கூடிய ஆகம கமிட்டியை கோயில் நிர்வாக அதிகாரிகள் நியமிக்க வேண்டும். ஒருவேளை இந்த கமிட்டியில் கருத்து வேறுபாடு இருந்தால், ஜீயர்கள். பீடாதிபதிகளின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்கலாம் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை கொண்டு வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவை பலரும் பாராட்டி வருகின்றனர்.