விஜயவாடா
ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்து அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல புதிய அறிவிப்புக்களை அளித்து வருகிறார். அதில் பல அறிவிப்புக்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவ்வகையில் கடந்த 5 ஆம் தேதி அன்று விஜயவாடாவில் நடந்த ஆசிரியர் தின நிகழ்வில் கல்வி முறையில் பல மாறுதல்களைச் செய்து அரசுப் பள்ளிகளை வலுவேற்ற உள்ளதாக அறிவித்தார்.
அதையொட்டி நேற்று ஜெகன்மோகன் ரெட்டி, “அரசுப் பள்ளிகளில் பல தீவிர மாறுதல்களைச் செய்ய இந்த அரசு உத்தேசித்துள்ளது. அதன் முதல் கட்டமாக அனைத்து அரசுப்பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அரசு வழங்க உள்ளது.
இந்த பயிற்சிகள் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 70000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குக் கல்வி மற்றும் பயிற்சிக்கான மாநில அளவிலான கல்வி நிலையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. அத்துடன் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியப்பணி இடங்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிரப்பப்பட்டு ஆசிரியப் பணி இடங்கள் காலியாக இல்லாத நிலை உருவாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.