விஜயவாடா: ஆந்திர சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், இம்மாதம் 16ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டசபை செயலாளர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ஆந்திர சட்டசபையின் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுன் 16ம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது.

ஆளுநர் பி.பி.ஹரிசந்தன் சட்டசபைக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். அதன்பின்னர் 2020- 21ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூட உள்ளது. இதில், கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.