‘ஆண்டாள்’ சர்ச்சை: யாருக்கும் யாருக்குமானது?: நிதானமான.. ஆழமான அலசல்
சிறப்புக்கட்டுரை: சாவித்திரிகண்ணன்
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆண்டாள் குறித்த சர்ச்சையை பக்தர்களுக்கும் – பகுத்தறி வாளர்களுக்குமான சர்ச்சையாக பலரும் புரிந்து கொள்கிறார்கள்.
இது மிகத்தவறான புரிதல்!
இதை பக்தர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்குமான மோதலாக உருவாக்கி வளர்த்தெடுக்க சிலர் முயற்சிக்கி றார்கள் என்பதே உண்மை!
உண்மையில் உண்மையான பக்தர்களும், உண்மை யான பகுத்தறிவுவாதிகளும் இதில் சம்பந்தப்படவேயில்லை. இந்த சர்ச்சைக்குள் அவர்கள் இல்லை.
இந்த சர்ச்சைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே யில்லை. அப்படி சம்பந்தப்படுத்திவிட நினைப்ப வர்கள் முற்றிலும் தோல்வியே அடைவார்கள்.
பக்தனின் மனநிலையும், பகுத்தறிவாளானின் மனநிலையும் முற்றிலும் வெவ்வேறான தளத்தில் இயங்குபவை.
பக்தி மனநிலை என்பது உணர்ச்சி பிரவாகமானது, நெகிழ்ச்சியானது, எதையும் பிரித்துப் பார்க்கத் தெரியாதது, அனைத்தையும் ஒன்றாக பாவிப்பது. தன்னை எதிரியாகக் கருதுபவனைக் கூட தன்னுள் ஒருவனாக பாவிக்கும் பரந்துபட்ட மனநிலையை கொண்டது.
பகுத்தறிவானது நிகழ்காலத்தில் தான் தேடிப்பெற்ற தகவல்களோடு எது ஒன்றையும் அதன் சமூகம் மற்றும் சரித்திரம் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுவது! வைரமுத்துவின் கட்டுரை என்பது பகுத்தறிவு சார்ந்தது.
பகுத்தறிவு என்பது உண்மைக்கான தேடலை அடிப்படை யாகக் கொண்டது. அது எப்போதும் கட்டமைக்கப்பட்ட மாயைகளோடு சமரசம் கொள்ளாது.
எல்லா மனிதர்களுக்கும் பகுத்தறிவும் உண்டு, பக்தியும் உண்டு. இவை இரண்டும் கலந்தவன் தான் எந்த மனிதனும்! ஒருவன் தான் பிறந்து வாழும் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்தே ஒன்றை பக்தியோடு அணுகுவதும், மற்றொன்றை பகுத்தறிவு கொண்டு அணுகுவதும் அமைகிறது.
அந்தக் கட்டுரையில் வைரமுத்துவின் பகுத்தறிவையும் நான் கண்டேன். பக்தியையும் நான் உணர்ந்தேன். அவரது பக்தி என்பது தமிழ்மொழிசார்ந்தது. ஆண்டாளின் தமிழ் ஆளுமை வைரமுத்துவை தமிழ்பக்தி பரவசத்தில் ஆழத்தி யிருப்பதை கட்டுரை நெடுகிலும் எவராலும் உணரமுடியும். அந்த தமிழ்பக்தி தான் அவரை, ‘ஆண்டாள் ஆன்மீகம் சார்ந்தவர்களுக்குரியவள்’ என்று புறக்கணித்து செல்லமுடியாமல், நெஞ்சில் வாரியெடுத்து புளகாங்கிதம் அடைய வைக்கிறது. தலையில் தூக்கி வைத்து ஆனந்தக்கூத்தாட வைத்துள்ளது.
பாருங்கள், அவர் தேடிகண்டடைந்த ஆய்வு ஆண்டாளை தேவதாசி குலத்தவள் என்றதை ஆண்டாளுக்கான ஒரு குறையாகவோ, அவமானத்திற்குரியதாகவோ வைரமுத்துவிற்கு கருதத்தோன்றவில்லை. ஆண்டாள் யாராக இருந்தாலும் அவளை கொண்டாடத் தயங்காத மனநிலை அவருக்கு பூரணமாக வாய்த்துள்ளதால் தான் அவர் தன் கட்டுரையிலும், சொற்பொழிவிலும் அதை பதிவு செய்துள்ளார்.
ஆண்டாளின் பக்தர்களுக்கும், உண்மையான ஆன்மீக அன்பர்களுக்கும் வைரமுத்துவின் அதே மனநிலை தான் இருக்கமுடியும். ஒரே வித்தியாசம் வைரமுத்துவினுடையது மொழிசார்ந்த தமிழ் பக்தி! மற்றவர்களுடையதோ தெய்வீக உணர்வு சார்ந்த பக்தி.
பக்தி சார்ந்த மனநிலை என்பது மிகவும் நுட்பமானது. அதேசமயம் திட்பமானது. அது எந்த அறிவுசார்ந்த வாதங்க ளாலும், நிரூபணங்களாலும் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள முடியாதது. அதை பொருட்படுத்தாதது.
“கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்….”
என்று பரவச மனநிலையிலேயே ஒரு பிசிறும் இல்லாமல் பின்தொடர்வது! அது தான் நம்பும் ஒன்றிற்காக தன்னைத்தானே முழுமையாக அர்பணிப்பது. சர்வபரித்தியாகத்திற்கும் சித்த மாயிருப்பது. எந்த மதமோ, குலமோ பாகுபாடு பாராதது!
கல்லோ, கதிரவனோ, மரமோ, விலங்குகளோ, ஊர்வனவோ, பறப்பனவோ… அனைத்திலும் தெய்வத்தை காண்பது.
தமிழ்நாட்டில் ‘குலதெய்வம்’ என ஒவ்வொரு குடும்ப மரபிற்குமான தெய்வவழிபாடு உள்ளது. இந்த குலதெய்வம் சாமிகளில் பலரும் வாழ்ந்து மறைந்தவர்களே! நாட்டார் தெய்வங்கள், தமிழ்மண்ணின் சாமிகள் எனப்படும் கண்ணகி, இசக்கியம்மன், நல்லதங்காள், பாப்பாத்தி, கருப்பாயி, சுடலைமாடன், மதுரைவீரன்… இவர்களின் கதை என்ன? இவர்களெல்லாம் ரத்தமும், சதையுமாக பல மனிதர்களையும் போல குற்றங்கள், குறைகளோடு வாழ்ந்து மறைந்தவர்களே…!
ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பதவிகளில் இருந்தாலும், அந்தஸ்து பெற்றிருந்தாலும், அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மறப்பதில்லை. அந்த சாமிகளின் கதை எவ்வளவு அவலமானதாக, சோகமயமானதாக இருந்தாலும் நம்பிக்கை சிதைவதில்லை. இது தான் பக்தியின் இயல்பு!
காரணம் ஒருவர் யாரை அல்லது எதை வழிபடுகிறார் என்பதை விடவும், அப்படி வழிபடும் போது அவருக்கு கிடைக்கும் உணர்ச்சி நிலை, உருவாகக்கூடிய உன்னதமான மனநிலை தான் அவருக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை, பிடிமானத்தை ஏற்படுத்து கிறது. இந்த நம்பிக்கையும், பிடிமானமும் ஏற்பட்ட பின்பு அவர் நிச்சயம் பகுத்தறிவு கண்கொண்டு தான் வழிபடும் இறையை ஆராய முற்படுவதில்லை. மாறாக அதனோடு ஐக்கியப் படுவதில் தான் பேரார்வம் கொண்டவராக இருப்பார்.
பக்தி என்ற உன்னதமான விஷயத்தை கொண்டு பல்வேறு ஆதாயம் தரும் அணுகுமுறைகள் நடக்கலாம். பணத்திற்கான, செல்வாக்கிற்கான ஒரு கருவியாகவும் பலர் இதை பயன்படுத்தலாம். ஆனால் இதையெல்லாம் பக்தர்கள் உணராமலில்லை. எனினும் இதனால் மன மாச்சரியங்கள், துவேஷங்கள் ஏற்படாத வண்ணம் சமூக மானது ஒரு இணக்கமான சூழலை பேண விரும்பு கிறது. அவரவர் வினையின் பலனை அவரவர் அனு பவிக்காமல் தப்பமுடியாது. ஆகவே, நம்மை நாம் சரியாக வைத்துகொள்வதற்கான ஒரு கருவியாக பக்தியை, இறை நம்பிக்கையை கைகொள்ளவேண்டும் என்பதே பெரும்பாலான கோடானகோடி பக்தர்களின் மனநிலையாக உள்ளது.
பகுத்தறிவாளர்கள் பக்தர்களுக்கு எதிரியல்ல. பக்தியின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கை களையும். சமூக அநீதியையும் எதிர்ப்பவர்களே பகுத்தறிவாளர்கள். பக்தி வசப்பட்ட மனிதனை கடந்த காலங்களில் ஆதிக்க சக்திகள் தவறாக வழி நடத்தி யுள்ளன. அதனால் உடன்கட்டை, பால்ய விவாகம், சாதி ஆதிக்கம், சாதிபாகுபாடு, பெண்களுக்கு எதிரான அநீதி, போன்றவை நிகழ்ந்தன. அனைவருக்கும் கல்வி, சமத்துவத்திற்கான போராட்டம் போன்ற விஷயங்களில் பகுத்தறிவாளர்கள் தலையிட்டு இருக்காவிட்டால் இன்று இந்த அளவுக்கு, சமூகம் முன்னேற்றம் கண்டிருக்கவாய்ப்பில்லை.
சகமனிதனான பக்தன் மீது கொண்ட அக்கறை யினால் தான் ராஜாராம் மோகன்ராய் தொடங்கி பெரியார் ஈறாக பலர் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூடநம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினார். ஆகவே, பகுத்தறிவாளர்களை பகைவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளுக்கும் பக்தர்கள் இறையாகக்கூடாது!
பக்த்தறிவாளர்களின் பார்வையை பக்தர்கள் பரிசீலனைக்கு உரியதாக கருதலாம் அல்லது புறக்கணித்துவிட்டுச் செல்லலாம்.
அப்படி ஒருவர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் ஏதோ ஒரு அறியாமையிலிருந்தோ. ஆபத்திலி ருந்தோ கூட விடுபடும் வாய்ப்பு அமையலாம். ஆனால் இதனால் பகுத்தறிவாளர்கள் அடையக்கூடிய ஆதாயம் ஏதுமில்லை. அவர்களின் பேச்சை புறக்கணிக்கப்பதாலும் பகுத்தறிவாளர்கள் இழப்புதற்கு ஏதுமில்லை.
ஆனால், பகுத்தறிவாளர்களுக்கு எதிராக பக்தர்களை கொம்பு சீவி விடுபவர்களுக்கு நிறைய உள்நோக்கங்கள் உள்ளன.
பக்தி நெஞ்சம் யாரையும் பகையாய் கொள்ளாது என்பதற்கு பாரதிபாடலே உதாரணம்.
தின்னவரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நன்நெஞ்சே
அன்னை பாராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவோம் நன்செஞ்சே!
பகுத்தறிவாளர்களுக்கும் பாரதியிடமே விளக்கம் பெறுவோம்.
உண்மையின் பேர் தெய்வமென்போம் – அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக்கண்டோம்.
ஒரு மக்கள் சமுதாயமானது சமச்சீரோடு இயங்குவதற்கு பெருமளவு பக்தர்களும், சிறிதளவு பகுத்தறிவாளர்களும் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள்!