சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
நிஜத்தின் நிழல் பெரும்பாலும் ஜொலிப்பதேயில்லை. இதை, திரை நட்சத்திரங்கள், சொந்தமாக பேசும்போது பொதுவெளி அறிவை உற்று நோக்கினாலே புரிந்துகொள்ளமுடியும். என்ன பேசுகிறோம் என்பதே புரியாமல் சகட்டுமேனிக்கு அடித்துதள்ளுவதும் அப்புறம் சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிப்பதும் அவர்களுக்கு புதிதல்ல..
ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்துபற்றி யோசிக்கும்போது பழைய வரலாறுகள் வந்துபோகவே செய்கின்றன.
1970களில் தமிழ்சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நடிகை சுஜாதா, ஒரு பேட்டியில், ‘’வெளியே வந்தால்தான் கொஞ்சம் மேக்கப்போடுவேன், மற்றபடி வீட்டிலிருக்கும்போது குறத்தி மாதிரி இருப்பேன்’’ என்று சொல்லிவிட்டார்.. அதாவது குறத்தி என்றால் அலங்கோலமாய் இருப்பது என்ற பொருளில் போய்விட்டது அவரது வார்த்தை பிரயோகங்கள்..
அவ்வளவுதான் குறவர் சமூக மக்கள் கடுமையாக கண்டனக்குரல் எழுப்ப பெரும் சர்ச்சை உருவானது. கடைசியில் நடிகை மன்னிப்பு கேட்டபிறகே விவகாரம் முடிவுக்கு வந்தது.
கடந்த மாதம்கூட இந்தி திரையுலகில் ஒரு வில்லங்கம்.. மிகவும் பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டி, தாம் வீட்டில் இருக்கும்போது பாங்கி கோஷ்டி மாதிரி இருப்பேன் என்று ஒரு நிகழ்ச்சியில் சொல்லிவிட்டார்.. அவ்வளவுதான், விவகாரம் உடனே கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.. நடிகர் சல்மான்கானும் இதே பாங்கி பேச்சு சர்ச்சையில் சிக்கிக்கொண்டது இன்னொரு கூடுதல் தகவல்.
மும்பையில் ராஜ்கார் அகாரி ரிபப்ளிகன் கட்சியின் பொதுச்செயலாளரான நவீன் ராமசந்திரா மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உடனே முதல் தகவல் அறிக்கை பதிவானது. சட்டப்படி ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தரும்வரை ஓயமாட்டோம் என்று சபதமே போட்டார்கள் எதிர்ப்பாளர்கள்..
டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஷில்பா ஷெட்டி, சல்மான்கான்மேல் காவல்நிலையங்களில் புகாராகவும் நீதிமன்றங்களில் மனுக்களாகவும் படையெடுத்தன.. நிலைமை மோசமாக போவதை உணர்ந்த நடிகை ஷில்பா ஷெட்டி அலறியடித்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மன்னிப்பு கேட்டார்..
பாங்கி என்பது வடமாநிலத்தில் துப்புரவு தொழிலை மேற்கொள்ளும் ஒரு சமூகம். தீண்டாமை கொடுமையால் அவதிப்படுகிற அந்த பெண்களை, தனது சுத்தம் சுகாதாரமில்லா அலட்சிய தன்மைக்கு மேற்கொள்காட்டி நடிகை பேசவே அந்த சமூகம் கொதித்துப்போய் நட்சத்திரங்களை அனலில்போட்டு வறுத்தெடுத்தன..
மறுபடியும் தமிழகத்திற்கே வருவோம்.. கடந்த 2010 ஆண்டு.. ஒரு சேனலில் இன்டர்வியூ. அதில், ‘’உங்கள் வீட்டு வேலைக்கார பெண்ணை என்றைக்காவது ஆசையோடு உற்றுநோக்கியதுண்டா’’? என்று ஒரு கேள்வி..இதற்கு பதில் என்ன வந்ததுதெரியுமா?
‘’ஐய்யயோ, என் வீட்டு வேலைக்காரி, தமிழ்நாட்டு பொம்பளையை போல தடிப்பா, கருப்பா எருமைமாடு மாதிரி இருப்பா, அவளைப்போய் நான் எங்கே பார்க்கிறது?’’ – இப்படி பதிலை சொன்னவர் வேறு யாருமல்ல, மலையாள முன்னணி நடிகர் ஜெயராம்..
மலையாள நடிகர் என்றாலும் தமிழிலும் முறைமாமன், தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் என்பதால் தமிழ் மக்கள் மத்தியிலும் நன்கு பிரபலமானவர். அதைவிட முக்கியமான விஷயம், ஜெயராம் தனது மனைவியான நடிகை பார்வதியுடன் வசிப்பது சென்னை வளசரவாக்கத்தில்தான்.
தமிழ்பெண்களை இழிவுபடுத்தி பேசியவரை விடமாட்டோம் என்று எதிர்ப்புகிளம்ப, ஜெயராம் வீட்டின் மீது கற்கள் பறந்தன.. தமிழ்த்திரையுலக நடிகர்- நடிகைகளே அவர் சார்பாக பேசமுடியாமல் நழுவிக்கொண்டுபோனார்கள்.
தமிழச்சியை கருப்பான, தடித்த எருமை என்று சொன்னவருக்கு சப்போர்ட் செய்தால், தங்கள் ஜோலியும் முடிந்துவிடும் என அவர்களுக்கு தெரியாதா? கடைசியில், வேறு வழியில்லாமல் இருகைகளையும் கூப்பி தமிழக மக்களை நோக்கி, பகிரங்கமாய் மன்னிப்புகேட்டுக்கொண்டார் நடிகர் ஜெயராம்..
இதற்கு ஐந்தாண்டுகளுக்குமுன் இதைவிட தமிழ்நாட்டையே அல்லோலகலப்படவைத்தது குஷ்புவால் வந்த சர்ச்சை ஒன்று.
திருமணத்திற்குமுன் உடல் உறவில் ஈடுபடும்போது பெண்கள் தற்காப்பு சாதனங்களை கட்டாயம் அணியுங்கள் என்று சொன்னார் குஷ்பு. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக அவர் இப்படி அளித்தபேட்டி அவருக்கே வினையாக மாறிப்போனது.
திருமணத்திற்கு முன் உறவு கொள்கிறவர்கள் என்றால், அப்போது தமிழ்ப்பெண்கள் எல்லோரும் அப்படித்தான் உறவு வைத்துக்கொள்கிறார்களா என கேள்விக்கணைகள் பறக்க ஆரம்பித்தன
தமிழ்ப்பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் களத்தில் ஆக்ரோஷமாக குதித்தன.
ஆனால் குஷ்பு தரப்போ, திருமணத்திற்குமுன் உடல் உறவு கொள்ள நேரிட்டால், நோய் தொற்று மற்றும் கர்ப்பம் போன்றவற்றில் சிக்காமலிருக்க பாதுகாப்பு சாதனைங்கள் அணியுங்கள் என்றுதான் அறிவுரை சொன்னதாக விளக்கம் அளித்தது. இருந்தாலும் எதிர்ப்பு அடங்கவேயில்லை..
முதற்கட்டமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் வழக்கு பதிவாக, குஷ்பு நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராகியே தீரவேண்டும் என்கிற நிலைமை.. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் இப்படியொரு நெருக்கடி.
குஷ்பு மேட்டூருக்கு வந்தபோது கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கவேண்டியிருந்தது. அவர் நீதிமன்றத்தில் இருந்த, இரண்டு மணிநேரமும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரின் கார் செருப்பு வீச்சையும் அழுகிய முட்டைகளையும் தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருந்தது..
எந்த குஷ்புவுக்காக மயங்கி 1990களில் ரசிகர்கள் கோவில் கட்டினார்களோ, அதே தமிழ்நாட்டில்தான் அவர் வெளியே நடமாடமுடியாத நிலைமை ஏற்பட்டது.. தமிழகத்தின் பல பகுதிகளில் பதிவான வழக்குகளை ஒன்றாக்கி உச்சநீதிமன்றம் போய் உடைத்துக்கொண்டு வந்தபிறகே குஷ்புவால் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.
சாதாரண ஒற்றை வார்த்தையை வைத்து விளையாட களம் கொண்ட தமிழ் மொழியில் சொல்லவந்ததை தெளிவாக சொல்லாத காரணத்தால் குஷ்பு பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல..
நடிகைக்கு இதெல்லாம் தெரியாமல் போகலாம். ஆனால் கவிஞனுக்குக்கூடவா வார்த்தை பிரயோகம், பொருந்தா சூழல் போன்றவை தெரியாமல் போகும்?
சும்மா என்ற சொல்லுக்கே, வெறுமனே என்பதை தாண்டி ஆணாக இருந்தால், ‘’வேலை இல்லாமல் இருத்தல்’’, புதுமணப்பெண்ணாக இருந்தால் ‘’தாய்மை அடையாமல் இருத்தால்’’ என விதவிதமாக, அதே நேரத்தில் குத்தலாகவும் பொருள்படி சொல்வார்கள்… ஆக ஒரு சாதாரண சொல்லையே வில்லங்கத்தில் ஏத்திவிடுவார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், வைணவர்களால் புனிதமாக கொண்டாடப்படும் திருப்பாவை அருளிய ஆண்டாளை, ஏதோ ஒரு வெளிநாட்டுக்காரன் வெளியிட்ட புத்தகத்தில் போகிற போக்கில் தேவதாசி என குறிப்பிட்டிருந்ததை தோண்டியெடுத்து மேற்கோள்காட்டி பேசினார் கவிஞர் வைரமுத்து.. அதை அப்படியே கட்டுரையாக பதிவு செய்து வெளியிட்டது தினமணி நாளிதழ்..
ஆண்டாள் சர்ச்சை வெடித்தது. ஆண்டாளை குல ஆராய்ச்சி செய்து அவரை ஏன் தேவையேயில்லாமல் தேவதாசி என மேற்கோள்காட்டவேண்டும் என்பது தான் இங்கு முக்கியமான கேள்வியாகிப்போனது..
தேவதாசி, தேவரடியாள் போன்ற சொற்கள் ஒரு காலத்தில் மேன்மைக்கு உரியதாக இருந்து பின்னாளில் எதிர்மறையான வேறு தளத்திற்கு போய்விட்டவை.. ஆத்தா என்ற புனிதமான சொல்லையே கொஞ்சம் நாக்கை துருத்தி சொன்னால் விகாரமாய் போய்விடும்..
இப்போது ஆண்டாளை கவிஞர் வைரமுத்து தவறாய் சித்தரித்ததாக பிரச்சினை எழுந்து கொழுந்து விட்டெரிகிறது.. வைணவர்கள் போராட்டம் நடத்த, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்..ஆனாலும் எதிர்ப்பாளர்களின் கோபம் இன்னமும் தணிந்தபாடில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதிக்குவந்து வைரமுத்து மன்னிப்பு கேட்டால்தான் பிரச்சினைக்கு விமோசனமே கிடைக்கும் என்று எதிர்ப்பாளர்கள் ஒருபடி மேலேபோய் உட்கார்ந்துவிட்டுள்ளார்கள்.
ஒரு சர்ச்சை என்று வந்தால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே காவல்நிலையங்களில் புகார் கொடுப்பது, நீதிமன்றங்களை நாடுவது போன்ற சமாச்சாரங்கள் வைரமுத்து விவகாரத்திலும் ஆரம்பித்து வெற்றிகரமாகவே பீடு நடைபோட்டது.
விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுபோய், ஆண்டாள் சர்ச்சையில் தனக்கு எதிராக சட்டபூர்வ விசாரணைக்கு ஒட்டுமொத்தமாய் தடைபெற்றிருக்கிறார் வைரமுத்து.
மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் உற்றுநோக்கி பார்த்தால், ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாக புரியும்.. பிரபலங்கள் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து நன்றாக விளம்பரம் கிடைத்துவிட்டபிறகு, வருத்தம் சொல்லிவிட்டோ, மன்னிப்பு கேட்டுவிட்டோ சுலபமாக, ஆனால் லைம்லைட் லாபத்தோடு பிரச்சினைக்கு சுபம் பாடிவிடுவார்கள்.
ஓரிருவர் மட்டுமே சட்டப்போராட்டத்தில் சிக்குவார்கள். ஆனால் அவர்களும் அதிலிருந்து விடுவித்துக்கொள்வார்கள்.
கோழி போய் கத்திக் கத்தி குரலும் போச்சு என்பார்கள். கோழி காணவில்லையென்றால் அங்குமிங்கும் தேடிப்பார்த்து கிடைக்காவிட்டால் விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கவேண்டும்.. தொடர்ந்து ஓயாமல் கத்திக் கத்தி தேடிக்கொண்டே இருந்தால் கோழியோடு குரலும்தான் போய்விடும்.
கோழிக்கான முக்கியத்துவம் கோழிக்கான அளவில் மட்டுமே இருக்கவேண்டும்.. எல்லாவற்றையும்விட கோழிதான் உலகிலேயே பெரிய விஷயம் என்றால் வெற்றி என்பது, தேடியவர்களை அலையவிட்ட கோழிக்கே..!