பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டில், தமிழ்நாட்டின் ஆனந்தன் தனது கணக்கில் இதுவரை மொத்தமாக 3 தங்கப்பதக்கங்களை ஏற்றிக்கொண்டுள்ளார்.

உலக ராணுவ விளையாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 9300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இப்போட்டியில் ராணுவப் பணியில் தனது காலை இழந்த தமிழகத்தின் ஆனந்த் கலந்துகொண்டு, 100 மீ. ஓட்டத்தில் ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார்.

இதனையடுத்து, 200 மீ. மற்றும் 400 மீ. ஓட்டத்திலும் அவர் தங்கப்பதக்கம் வென்று தனது தங்க வேட்டையைத் தொடர்கிறார். உலக ராணுவ விளையாட்டில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றவரே அவர்தான்.

அப்படியிருக்க, மொத்தமாக 3 தங்கங்களை வென்றது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. 200 மீ. ஓட்டத்தில் கலந்துகொண்ட அவர், பந்தய தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து தங்கத்தைப் பெற்றார்.

ஈட்டி எறிதல் போட்டியில், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ்பால், தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் கணக்கில் மேலும் ஒரு தங்கத்தைக் கூட்டினார். அவர் எறிந்த தூரம் 83.33 மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.