பெங்களூரு: கர்நாடக முதல்வர் பி.எஸ். யெடியூரப்பா 11ம் தேதியன்று ஆனந்த் சிங்கை வனத்துறை அமைச்சராக நியமிக்க எடுத்த முடிவு, “கருத்து வேற்றுமை“ கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கர்நாடக வனச்சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்கள் உட்பட, தனக்கு எதிராக ஒரு டஜன் வழக்குகள் நிலுவையில் உள்ள ஒருவரை அப்பதவிக்கு நியமனம் செய்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயநகர் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிங், கடந்த டிசம்பர் 2019 இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்த வாக்குமூலத்தின் படி, அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கர்நாடக வனச் சட்டத்தின் மீறல்களுடன் தொடர்பான குற்றங்களாகும்.
சிங் உட்பட சில புதிய அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் குறித்து அதிருப்தியைத் தெரிவித்ததால் அவர்களுக்கு மாற்று இலாக்காக்கள் ஒதுக்க வேண்டிய அழுத்த்த்தில் முதல்வர் யெடியூரப்பா இருந்த்தாகத் தெரிகிறது. முன்னதாக, ஆனந்த் சிங்கிற்கு உணவு மற்றும் சிவில் சப்ளை மற்றும் பி.சி. பாட்டீலுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டதாகவும் அவர்கள் இருவருமே அதுகுறித்து அதிருப்தியைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆகையால் ஒரு விரைவான மறுசீரமப்பில், சிங்கிற்கு வனத்துறையும், பாட்டீலுக்கு விவசாயத்துறையும் மற்றும் கே. கோபாலையாவுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளையும் ஒதுக்கப்பட்டது. கறைபடிந்த சுரங்கப் பெருமுதலாளிகளான ரெட்டி சகோதரர்களின் முன்னாள் கூட்டாளியான சிங், கர்நாடக லோகாயுக்தாவின் சிறப்பு விசாரணைக் குழுவினரால் சட்ட விரோத இரும்புத் தாதுப் போக்குவரத்துக் குற்றச்சாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
பெலக்கேரி துறைமுகத்திலிருந்து இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக சிங் 2013 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.