திருவேற்காடு: தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமைக்கு முன்மாதிரியாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அமைச்சர் நாசர் கருமாரியம்மன் கோவில் தேர் இழுத்தார். இது பொதுமக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. சென்னை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. கோவிலுக்கு நேற்று காலை வந்த அமைச்சர் நாசர் அம்மனை வணங்கி, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதை கண்ட பக்தர்கள் அமைச்சரின் நடவடிக்கையை பாராட்டி மகிழ்ந்தனர்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அதிகாரை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் என விமர்சையாக நடைபெற்றது. சாமி வேடம் அணிந்த சாமிகள் கையில் வேலுடன் நடனம் ஆடினர்.
தேரோட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரட்டிருந்தனர். அவர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து அம்மன் ஆசி பெற்றனர். கோயிலின் முக்கிய நான்கு மாடவீதிகளின் வழியாக தேர் இழுத்து செல்லப்பட்டு நிறைவாக கோயில் அருகே கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.