கொழும்பு: இலங்கையில் 80ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குட்டிகளை பெண் யானை ஒன்று ஈன்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இலங்கையில் அமைந்துள்ள பின்னவலை யானைகள் புகலகம் (Pinnawala Elephant Orphanage) புகழ்பெற்றது.இங்கு காடுகளில் அனாதையாக திரியும் யானைகளை கொண்டு வந்து பராமரித்து வருகின்றனர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளில் பெரும்பாலானவை தாயினால் கைவிடப்பட்ட குட்டிகள் அல்லது அனாதையாக்கப்பட்ட குட்டிகளாகும்.
இந்த நிலையில், அங்குள்ள பெண் யானை ஒன்று இரு குட்டிகளை ஈன்றுள்ளது. SURANGI எனப் பெயரிடப்பட்டுள்ள 25 வயதான யானை, இரட்டை ஆண் யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது.
சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது பெரும் வரவேற்பையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.
ஏற்கனவே 1914 ஆம் ஆண்டில் இந்த காப்பக்கத்தில் ஒரு யயானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ள நிலையில், 80 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சுரங்கி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளதாக அங்குள்ள, வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.