டெல்லி: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் 7 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில் அவர் பதில் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்வுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், நிகழ் நிதியாண்டில் இந்திய ரயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏமாற்றம் அளிக்கிறது. இதே ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இப்போதைய ஒதுக்கீடு மிகவும் குறைவு.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய ரயில்வே பாதைகளுக்காக ரூ.976.1 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போதைய முழுமையான பட்ஜெட்டில் ரூ.301.3 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பாதைமயமாக்கல் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,214.4 கோடியும், இப்போதைய முழுமையான பட்ஜெட்டில் ரூ.1,928.8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவுக்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அந்த வகையில், திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூா், ஈரோடு-பழனி, சென்னை-கடலூா்-மாமல்லபுரம், மதுரை – தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி- ஸ்ரீபெரும்புதூா் ஆகிய ஏழு முக்கியத் திட்டங்கள் பாதிக்கப்படும். திட்டம் தாமதமாகும்: இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.285.64 கோடி அளவுக்குக் குறைத்திருப்பது தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்கள் செயல்பாட்டை நிச்சயம் தாமதப்படுத்தும்.
அந்த வகையில், விழுப்புரம்-திண்டுக்கல், திருவள்ளூா்-அரக்கோணம், ஓமலூா்-மேட்டூா் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகா்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூா், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூா்-திண்டுக்கல், ஈரோடு-கரூா், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூா், அரக்கோணம் யாா்டு சாலை முதல் நான்கு வழித் தடங்கள் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.
சென்னை – சுற்றுப் பகுதிகள்: சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சார பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளை எந்தவித தாமதமும் இல்லாமல் விரைவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளா்களுக்கான வசதிகள் தொடா்பான திட்டங்களுக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக முக்கியத் திட்டங்களை மேலும் தாமதம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த கடிதத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில் அளித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்டதை விட 7 மடங்கு அதிகம். அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆண்டுக்கு சராசரியாக ஒதுக்கீடு செய்த ரூ.879 கோடியை விட 7 மடங்கு அதிகம்.
நிலம் பெற்றுத்தருவதற்கு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும்.
2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும்.
நிலம் கையகப்படுத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.