சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் இன்று காலமானார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரான வெற்றிவேல் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிவேல் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வெற்றிவேலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், நுரையீரலில் தொற்று அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.