ஆம்பூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து  இன்னும் சில நாட்களில் விடுதலை செய்யப்பட உள்ளார். அவரது விடுதலையை ஆர்ப்பாட்டமாக வரவேற்க அவரது விசுவாசிகள்,  அமமுகவினர் தயாராகி வருகின்றனர்.  அவர் வரும் வழியில் பேனர்கள், பிளக்ஸ்க்ள் வைக்க அனுமதி வழங்கக்கோரி பல பகுதிகளில், அமமுகவினர் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

வருமானத்தை மீறி சொத்து குவித்தது தொடர்பான வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மற்றும் அவரது தோழிசசிகலா,  இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவ்ளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மேல்முறையீடு வழக்கில், அவர்கள்மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில்,  மிக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜெயலலிதா மரணத்தை தழுவினர். அதையடுத்து, அவரை விடுவித்த நீதிமன்றம், அவரது உதவியாளரான சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும்   நான்கு ஆண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  சசிகலா, இளவசரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் தண்டனைக்காலம் முடிவடைகிறது. மேலும் அபராதமும் செலுத்தப்பட்டு விட்டது.  இதனால்,  வரும  27ஆம் தேதியன்று சசிகலா விடுதலையாவார் என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சசிகலா விடுதலையை ஆர்ப்பாட்டமாக கொண்டாட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து அவர் சென்னை  வரும் வழி முழுவதும தோரணங்கள், பிளக்ஸ்கள், பேனர்கள்  வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,  தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி இரவே தொண்டர்களை ஒசூர் செல்வதற்காக வாடகை கார்களை புக்கிங் செய்து வைத்திருக்கின்றனர். இதோடு ஊருக்கு தகுந்தவாறு ஒரு சில நிர்வாகிகள் பேருந்துகளை புக்கிங் செய்து வருகின்றனர். குறைந்தது 60 இடங்களில் இருந்து 100 இடங்கள் வரை சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட வேண்டிய ஸ்பாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைத்தொடர்ந்து, சசிகலா வரும் பகுதிகளில் உள்ள அமுமக நிர்வாகிகள், அதற்கான அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக  திருபத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர அமமுகசெயலாளர் சமரசன், ஆம்பூர் வட்டாட்சியரிடம் அனுமதிகோரி விண்ணப்பித்துஉள்ளார்.

அவரது விண்ணப்பத்தில், இம்மாதம் கடைசி வாரத்தில் சசிலாக பெங்களூரில் இருந்து ஆம்பூர் வழியாக சென்னை செல்ல உள்ளதால், ஆம்பூர் பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளதாகவும்  தெரிவித்து உள்ளார்.

அமமுகவினரின் விண்ணப்பத்துக்கு தமிழகஅரசு அனுமதி வழங்குமா என்பது தெரியவில்லை.  சசிகலா விடுதலை விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது அதிமுக தலைமை. சசிகலா விடுதலைக்கு பிறகும் கட்சியில் எந்த ஒரு சலசலப்பும் ஏற்படாத வகையில் அதற்கேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.