அம்மன்குடி பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணம் சேத்திர காண்டம் 66-வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால் புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. தேவியானவள், மகிஷாசுர வதத்திற்கு பின்னர் அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை கைலாஷ்ஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்து தபசுக்கு இடையூறு செய்பவர்களை நாசம் செய்வதற்காக ஸ்ரீ விநாயகரையும் பிரதிஷ்டை செய்து தேவியானவள் 12 வருடங்கள் மிக கடுமையான தவம் செய்தாள். அதுமுதல் இந்த இடமானது தேவி தபோவனம் என்ற பெயருடன் பிரசித்தி அடைந்து இருக்கிறது.
இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தேவியின் தவத்தினால் மகிழ்ந்த கைலாசநாதபெருமாள், தேவியை நோக்கி உன்னுடைய தோஷங்கள் எல்லாம் நீங்கி விட்டன. நீ இத்தலத்திலேயே வீற்றிருந்து உன்னை தரிசிப்பவர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலித்து வருவாயாக. உனது அருளால் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என திருவாய் மலர்ந்தருளினார்.
தனக்கு அருள் புரிந்த கைலாச நாதரை பார்வதி அம்மையுடன் தேவியே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சிவபெருமான் ஆணைப்படி இத்திருக்கோவிலில் குடிகொண்டு அருளினாள் துர்க்கா பரமேஸ்வரி. தேவி, தவம் புரிந்தமையால் தபோவனம் என்றும், இவ்வூரில் குடிகொண்டு அருளியதால் அம்மன்குடி என்றும் புகழ் பெற்று இவ்வூர் விளங்குகிறது.
சிவன் கோவிலில் துர்க்கா தேவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். ஆலயத்தின் கர்ப்பகிரகத்திற்கு வெளியில் 3 சுவர்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.
துர்க்கா தேவியானவள், சகல தேவதைகளும் தேஜஸ்களில் இருந்தும் உண்டானபடியால் துர்க்கைக்கு செய்யும் பூஜை அனைத்து தேவைகளுக்கும் செய்யும் பூஜைக்கு சமம் ஆகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்காதேவி விளங்குவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஸ்தல விருட்சம் வில்வம். இத்தலத்தில் வழிபட சிறப்பிற்குரிய நாட்களாக விசேஷமாக 5 பருவங்களை பெரியோர்கள் வகுத்துள்ளனர்.